சிங்கப்பூரும் நியூசிலாந்தும் மின்னிலக்கப் பொருளியல் உடன்பாட்டை செய்துகொண்டு இருக்கின்றன. அந்த உடன்பாடு ஜனவரி 7ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.
இரு நாடுகளும் உடன்பாட்டை நடப்புக்குக் கொண்டு வர இணங்கி யதை அடுத்து இது சாத்தியமாவதாக சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சு நேற்று செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் கையெழுத்திட்டு இருக்கும் முதலாவது மின்னிலக்க உடன்பாடு இதுதான். நியூசிலாந்து, சிலி ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் அந்த உடன்பாட்டில் இந்த ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்திட்டது.
அந்த உடன்பாட்டின் விளைவாக சிலி மற்றும் நியூசிலாந்து நாடுகளுடன் மின்னிலக்க ரீதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு செலவு குறையும். மின்னிலக்கத் தடைகள் அவ்வளவாக இருக்காது. நம்பிக்கை அதிகரிக்கும். ஆற்றல் பெருகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் உடன்பாட்டில் சேர்ந்துகொள்ள தாம் ஆர்வமாக இருப்பதாக கனடா அண்மையில் தெரிவித்தது. இதன் தொடர்பில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தான் விரும்புவதாகவும் அது குறிப்பிட்டது. இதை சிங்கப்பூர் வரவேற்பதாக அமைச்சு நேற்று தெரிவித்தது.
கனடாவுடன் ஒத்த கருத்துடைய இதர நாடுகளுடன் சேர்ந்து செயல்பட்டு தொடர்புகளை வலுப்படுத்தி மின்னிலக்கப் பொருளியலில் அதிக வாய்ப்புகளை உருவாக்க சிங்கப்பூர் ஆர்வமாக இருக்கிறது என்று அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடு, மின்னிலக்க வர்த்தகத்தில் பொதுவான விதிமுறைகளைத் தோற்றுவிக்கிறது.
மின்னிலக்கப் பொருளியலில் தலையெடுக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க சேர்ந்து செயல்படுவதையும் இந்த உடன்பாடு ஊக்குவிக்கிறது.
தன்னுடைய மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடுகளை உறுதுணையாகக் கொண்டு, தனது தாராள வர்த்தக உடன்பாட்டு கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தலாம் என்று சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதோடு, இதர மின்னிலக்க ஒத்துழைப்புச் செயல்திட்டங்களையும் உருவாக்கலாம் என்பதும் சிங்கப்பூரின் நோக்கமாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடு என்ற மற்றோர் உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் சிங்கப்பூர் நடத்தி முடித்தது.
இந்த உடன்பாடு, இம்மாதம் 8ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
இத்தகைய ஓர் உடன்பாட்டைத் தொடங்க, தாங்கள் திட்டமிடுவதாக சிங்கப்பூரும் பிரிட்டனும் இம்மாதம் அறிவித்தன.
கொரியா-சிங்கப்பூர் மின்னிலக்கப் பங்காளித்துவ உடன்பாடு என்ற ஓர் ஏற்பாட்டின் பேரில் தென் கொரியாவுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறது.

