அடுத்த திங்கட்கிழமை முதல் ஏழு சந்தைகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீக்கப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்துள்ளது.
பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் செயல்திறன்மிக்கதாக இருப்பதை உறுதிசெய்யவும் அச்சந்தைகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று மூன்றாம் கட்டத் தளர்வுகள் நடப்பிற்கு வந்ததையடுத்து, அச்சந்தைகளிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன.
புளோக் 221 ஏ/பி பூன் லே பிளேஸ், புளோக் 448 கிளமெண்டி அவென்யூ 3, புளோக் 626 அங் மோ கியோ அவென்யூ 4, புளோக் 58 நியூ அப்பர் சாங்கி சாலை, புளோக் 4ஏ யூனோஸ் கிரசென்ட், புளோக் 216 பிடோக் நார்த் ஸ்திரீட் 1, புளோக் 360 பிடோக் ரெசர்வோர் சாலை ஆகியவையே அந்த ஏழு சந்தைகள்.
ஏற்கெனவே 20 சந்தைகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் 40 சந்தைகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு சந்தையிலும் நிர்ணயிக்கப்பட்ட அனுமதி வரம்பைக் காட்டிலும் கூடுதலாக எவரும் சந்தைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.
இன்னும் நீண்ட வரிசைகள் காணப்படுவதால் எஞ்சிய 13 சந்தைகளிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடரும் என வாரியம் தெரிவித்துள்ளது.
"சந்தைகளில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண, ஒரு கவனமான அணுகுமுறை தேவை என்பதைப் பொதுமக்களும் கடைக்காரர்களும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

