மூத்தோருக்கு ஏற்புடைய வீட்டுத் திட்டம்; 'எச்டிபி ஹப்'பில் மாதிரி வீடு அறிமுகம்

மூத்தோருக்கு ஏற்புடைய வீட்டுத் திட்டம்; 'எச்டிபி ஹப்'பில் மாதிரி வீடு அறிமுகம்

2 mins read
65a514c2-e81e-47f5-89f8-f0e96885d320
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் முதி­யோ­ருக்­காக வசதி­களு­டன் கூடிய முதல் பொது வீட­மைப்­புத் திட்­டத்­திற்­கான மாதிரி வீடு தோ பாயோ 'எச்­டிபி ஹப்'பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் அமை­ய­வி­ருக்­கும் இந்த 'சமூ­கப் பரா­ம­ரிப்பு அடுக்கு­மாடி வீடு­கள்' 65 மற்­றும் அதற்­கும் மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­களுக்­கா­னவை. தனி­யாக வசிக்க விரும்­பும் அதே வேளை­யில் பரா­ம­ரிப்பு, ஆத­ரவு, சமூக நட­வடிக்­கை­க­ளைப் பெற விரும்­பும் மூத்­தோர் இந்த வீடு­களை வாங்க விண்­ணப்­பிக்­க­லாம். இந்த மாதிரி வீட்டை நேற்று பார்­வை­யிட வந்த மூத்­தோர், இப்­பு­திய வடி­வம் தங்­களுக்­குப் பிடித்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னர். தங்­க­ளது வய­துப் பிரி­வில் உள்ள மற்­ற­வர்­க­ளு­டன் உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள இந்­தத் திட்­டம் வகை செய்­வ­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

இந்த வீடு­களில் கைப்­பி­டி­கள், சக்­கர நாற்­காலி பயன்­ப­டுத்­து­வ­தற்கு வச­தி­யு­டைய குளி­ய­லறை உள்­ளிட்ட மூத்­தோ­ருக்­கான வச­தி­கள் அமைக்­கப்­படும்.

இந்த அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரு­டன் பழ­கு­வ­தற்­காக ஒவ்­வொரு மாடி­யி­லும் சமூக இடம் அமைக்­கப்­படும். அவர்­களது நட­வ­டிக்­கை­க­ளைச் சமூக நிர்­வாகி கண்­கா­ணிப்­பார்.

அடுத்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் நடை­பெ­ற­வி­ருக்­கும் தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் (பிடிஒ) திட்­டத்­தின்­கீழ் இவற்­றின் முதல் தொகு­தி­யாக 160 வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­படும். இந்த வீடு­கள் 2024ல் கட்டி முடிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த வீடு­களை வாங்­கும் முதி­யோ­ருக்­குக் கட்­டாய சேவைத் தொகுப்­புத் திட்­டம் வழங்­கப்­படும். 24 மணி நேர­மும் செயல்­படும் அவ­ச­ர­கால உதவி, அடிப்­படை சுகா­தா­ரப் பரி­சோ­தனை, எளி­மை­யான வீட்­டுப் பழு­து­பார்ப்­புச் சேவை உள்­ளிட்ட வச­தி­கள் இந்­தத் தொகுப்­புத் திட்­டத்­தில் அடங்­கும். இந்த அடிப்­ப­டைத் தொகுப்­புத் திட்­டத்­திற்கு அனைத்து குடி­யி­ருப்­பா­ளர்­களும் சந்தா செலுத்த வேண்­டும். 15 ஆண்­டு­கால குத்­த­கைக்கு இந்­தத் தொகுப்­புத் திட்­டத்­திற்­கான கட்­ட­ணம் $22,000யில் இருந்து தொடங்­கு­கிறது.

இந்த வீடு­களை வாங்க விரும்­பும் மூத்­தோர், 15 முதல் 35 ஆண்­டு­கள் வரை­யி­லான குத்­த­கை­யைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம். வீட்டு விண்­ணப்­ப­தா­ரர் மற்­றும் அவ­ரது துணை­வி­யார் குறைந்­தது 95 வயதை எட்­டும் வரை குத்­த­கை­கா­லம் செல்­லு­ப­டி­யாக வேண்­டும்.

இந்த மாதிரி வீடு குறித்து தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று முன்­தி­னம் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார். வீட்­டுச் சூழ­லை­யும் அதன் அமைப்­பை­யும் பற்றி வரு­கை­யா­ளர்­கள் தெரிந்­து­கொள்ள இது வகை செய்­வ­தாக அவர் கூறி இருந்­தார்.