கொவிட்-19 ஆதரவு மானியத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 95,000 பேருக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. இரண்டாவது முறை இத்திட்டத்திற்குத் தகுதிபெற்ற 22,000 பேரும் இதில் அடங்குவர் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
கொவிட்-19 கொள்ளைநோயால் வேலையிழந்தோர், நிறுவனத்தின் உத்தரவில் சம்பளமில்லா விடுப்பில் இருந்தோர் அல்லது குறிப்பிடத்தக்க வருமான இழப்பு நேர்ந்தோருக்கு மானியத் திட்டம் கைகொடுத்துள்ளது.
முழுநேர அல்லது பகுதிநேர வேலையில் உள்ள சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பலனடையக்கூடிய இத்திட்டத்தின்படி, மாதம் தலா $800 வரை ஒருவருக்குக் கிடைக்கக்கூடும். இத்தொகை மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். அத்துடன் மூன்று மாதங்களுக்கு குறைந்தது 30 விழுக்காட்டு ஊதிய இழப்பு ஏற்பட்டிருந்தால், மூன்று மாதங்களுக்கு $500 வழங்கப்படும்.
வழங்கப்பட்ட ஒட்டுமொத்த தொகை எவ்வளவு என்பதை அமைச்சர் குறிப்பிடவில்லை. இருப்பினும், இந்த மானியத் திட்டம் வழி 83,000 பேருக்கு மேல் கிட்டத்தட்ட $148 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக அக்டோபர் மாதத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 ஆதரவு மானியத் திட்டத்திற்குத் தகுதிபெறக்கூடியவர்கள், உதவி தேவைப்படும் நிலையில் இருந்தால் டிசம்பர் 31ஆம் தேதி மாலை ஆறு மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் திரு மசகோஸ் தம் பதிவில் குறிப்பிட்டார். 'சிங்பாஸ்' மற்றும் தேவையான ஆவணங்களுடன் go.gov.sg/CSG என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கிருமி முறியடிப்பு நடவடிக்கைகளுக்குப் பின் பாதுகாப்பான மறுதொடக்கத்தின் மூன்றாம் கட்டத்துக்குள் சிங்கப்பூர் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் கொள்ளைநோயால் ஏற்பட்ட பொருளியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களின் நிலையைச் சுட்டினார் திரு மசகோஸ்.
சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டம், கொவிட்-19 ஆதரவு மானியத் திட்டம் போன்ற நிதியுதவித் திட்டங்கள் இவ்வாண்டு இறுதியில் ஒரு முடிவுக்கு வரவுள்ளதால், புதிதாகத் தொடங்கப்பட்ட கொவிட்-19 மீட்சி மானியம் சற்று ஆறுதல் அளிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
வேலை அல்லது வருமான இழப்புக்கு ஆளாகியுள்ள குறைந்த வருமான, நடுத்தர வருமான சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு இப்புதிய திட்டம் உதவும்.
கொவிட்-19 மீட்சி மானியத்திற்குத் தகுதிபெறுவோர், மூன்று மாதங்களுக்குத் தலா $700 பெறுவர். ஆட்குறைப்பு, வேலை ஒப்பந்தம் நிறுத்தப்படுதல், கட்டாய சம்பளமில்லா விடுப்பில் இருத்தல் போன்ற சூழல்களில் குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இருப்போருக்குரியது இப்புதிய திட்டம். புதிய திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 18ஆம் தேதிமுதல் சமர்ப்பிக்கப்படலாம்.

