சீனாவுக்காக அமெரிக்காவில் வேவு பார்த்த சிங்கப்பூரர், நேற்று இங்கு வந்ததும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் (ஐஎஸ்டி) கைது செய்யப்பட்டார். வேவு பார்த்ததன் தொடர்பில் 39 வயது டிக்சன் இயோ ஜுன் வெய் என்பவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணை அதிகாரிகளிடம் இயோ, "அமெரிக்காவைத் தவிர வேறு நாடுகளிலும் உளவு பார்க்கும் பணிகள் தரப்பட்டன," என்று கூறியிருந்ததாக ஐஎஸ்டி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
எனவே, 'சிங்கப்பூரின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில்' ஈடுபட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய இயோவை ஐஎஸ்டி விசாரிக்கவுள்ளது.
"நேர்மையற்ற முறையிலோ அந்நியர்களாலோ நம் பாதுகாப்பு மற்றும் தேசிய அம்சங்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் குடிமக்கள் ஈடுபடுவதை சிங்கப்பூர் ஒருபோதும் அனுமதிக்காது," என்றது துறை.
அந்நிய நாட்டு அரசாங்கத்துடன் ரகசியத் தொடர்பை ஏற்படுத்தி வேவு பார்ப்பது அல்லது அந்நியர் உத்தரவில் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிங்கப்பூரர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் மேல்விவரங்கள் கூறப்படவில்லை.
சீன உளவுத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அமெரிக்கர்களிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக இயோ இவ்வாண்டு ஜூலை மாதம் ஒப்புக்கொண்டார்.
வழக்கு விசாரணையின் இறுதிக்கட்டம்வரை, சீனாவுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்து வந்த இயோ, சிங்கப்பூருக்குத் துரோகம் இழைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
சீன உளவுத்துறையால் 2015ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட இயோ, நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் வேவு பார்த்தார்.
தனக்குத் தரப்பட்ட பணியின்படி பொதுமக்களுக்குக் கிட்டாத முக்கியமான தகவல்களை அறிந்திருக்கக்கூடிய அமெரிக்க ராணுவ வீரர்கள், அரசாங்க ஊழியர்கள் போன்ற அமெரிக்கர்களை அடையாளங்கண்டு மதிப்பிடுவதே ஆகும். அறிக்கைகள் எழுதுவதற்காக அமெரிக்கர்களுக்குத் தான் பணம் கொடுத்ததாகவும் அந்த அறிக்கைகளைப் பின்னர் எழுதியவர்களுக்குத் தெரியாமல் சீன அரசாங்கத்திற்கு அனுப்பியதாகவும் இயோ ஒப்புக்கொண்டிருந்தார்.
இதற்காகவே அரசியல் ஆலோசனைப் பிரதிநிதி என்ற போலி அடையாளத்தை இயோ பயன்படுத்திக்கொண்டார். யாரைக் குறிவைப்பது என்பதை அறிய சமூகத் தொடர்புத் தளங்களை அலசி ஆராய்ந்தார்.
இறுதியில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் இயோ பிடிபட்டார். இயோ கைதான செய்தி வெளிவந்ததை அடுத்து, வேவு பார்ப்பதற்காக அவரைச் சேர்க்கவில்லை என்று சீனா கூறி மறுத்தது. அத்துடன் 'அதீத சந்தேகப்படும் நிலையை' அடைந்துவிட்டதாக அமெரிக்காவை சீனா குற்றம் சாட்டியது.

