பொதுப் போக்குவரத்தில் பெண்களின் மானத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக சந்தேக நபர்கள் செயல்பட்டதைக் கவனித்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், அதில் தலையிட்டு அவர்களை போலிசாரிடம் பிடித்து கொடுத்ததற்காக அந்த மாணவர்களுக்குப் பொது உணர்வு விருது வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு தளபத்தியத்திடம் (டிரான்ஸ்காம்) இருந்து இந்த விருதைப் பெற்றுக்கொண்ட 15 பேரில் திரு லீ ஜூன் ஜியே, 25, திரு சான் ஹெங் வெய், 23, ஆகிய இவ்விருவரும் அடங்குவர்.
பொதுப் போக்குவரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் போலிஸ் விசாரணைக்கு உதவியதற்காக அவர்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச் 16ஆம் தேதி கூட்டம் நிறைந்த ரயில் ஒன்றில் இருந்த திரு லீ, அங்கிருந்த ஆடவர் ஒருவர் சந்தேகப்படும்படி நடந்துகொண்டதைக் கவனித்தார். ரயிலில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவருக்கு அருகே ஆவணப் பெட்டி வைத்து அதை அவர் சரிசெய்து கொண்டிருந்ததை திரு லீ பார்த்தார்.
அந்தப் பெட்டிக்கு மேலே கைபேசி ஒன்று வைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெட்டியை அந்த ஆடவர் அப்பெண்ணின் பாவாடைக்கு அடியில் வைத்ததை திரு லீ கவனித்தார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான திரு லீ, அந்த ஆடவரை எதிர்கொண்டு அவரது கைபேசியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார். அந்தக் கைபேசியில் அப்பெண்ணின் பாவாடைக்குள் எடுத்த புகைப்படங்களை திரு லீ கண்டார்.
அந்தப் படங்களை அந்தப் பெண் உறுதிப்படுத்தியதை அடுத்து, அந்தச் சந்தேக ஆடவரை திரு லீ அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றார். மெக்பர்சன் எம்ஆர்டி நிலையத்தில் 'டிரான்ஸ்காம்' அதிகாரிகளிடம் அந்த ஆடவரை ஒப்படைத்து நடந்தது குறித்து திரு லீ விவரித்தார்.
பெண் ஒருவரின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
பொது உணர்வு விருது பெற்ற பின் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய திரு லீ, "தேசிய சேவை நாட்களில் நான் போலிஸ் அதிகாரியாக இருந்தபோது, இதுபோன்ற குற்றச்செயல்களை எதிர்கொண்டு இருக்கிறேன். எனவே, இச்சம்பவம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
"எனினும், இச்சம்பவத்தில் அந்த ஆடவர் எனக்கு ஒத்துழைத்தது ஆச்சரியமாக இருந்தது," என்று கூறினார்.
மற்றொரு சம்பவத்தில், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவரான திரு சான், இவ்வாண்டு அக்டோபர் 15ஆம் தேதி ரயிலில் பயணம் மேற்கொள்ள அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்திற்குச் சென்றார். அப்போது மின்படியில் மாது ஒருவரின் பாவாடைக்கு அடியில் ஆடவர் ஒருவர் தமது கைபேசியை நீட்டியதை திரு சான் கவனித்தார்.
உடனே எம்ஆர்டி நிலைய ஊழியர்களிடம் இதுகுறித்து தெரியப்படுத்திய திரு சான், அந்தச் சந்தேக ஆடவரும் அந்த மாதும் ஏறிய அதே ரயிலில் ஏறினார். நடந்தது குறித்து அந்த மாதிடம் திரு சான் விவரித்தார். பின்னர் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

