போலிஸ் நடவடிக்கையின்போது காரில் ஏறி தப்பிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
பிணையில் வெளிவந்தபின் நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை ஆகாததால் ரயன் அசிரஃப் முகம்மது அஸ்மான், 26, எனும் அந்த ஆடவர் தேடப்பட்டு வந்ததாக போலிஸ் தெரிவித்தது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் புளோக் 331 புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 33 அருகே உள்ள கார் நிறுத்தப் பூங்காவில் வைத்து போலிசார் ரயனைக் கைது செய்ய முயன்றனர்.
போலிஸ் அதிகாரிகள் ரயனை நெருங்கியபோது அவர் தமது காரில் ஏறி தப்பிக்க முயன்றார்.
திரு ரூபனேஸ்வரன் ஞானசுப்பிரமணியம், திரு முகம்மது இத்லி அலி எனும் அதிகாரிகள் இருவர் ரயனின் வலக்கையைப் பிடித்து இருந்தபோது, அவர் தனது காரை பின்னோக்கிச் செலுத்தியதாகக் கூறப்பட்டது.
அப்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த குறைந்தது இரு கார்கள் மீது ரயனின் கார் மோதியது. இந்தச் சம்பவத்தில் திரு இத்லியும் திரு ரூபனேஸ்வரனும் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்த காணொளி யூடியூப் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
கண்காணிப்புப் படக்கருவிகளின் துணையுடன் ரயனின் இருப்பிடத்தை போலிசார் கண்டறிந்தனர். சில மணி நேரத்திற்குப் பின் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24, புளோக் 257ல் உள்ள ஒரு குடியிருப்பில் வைத்து போலிஸ் அவரைக் கைது செய்தது.
ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ரயன் ஏற்கெனவே எதிர்நோக்கியுள்ளார். தண்டனைக்காலக் குறைப்பு உத்தரவின்கீழ் இருந்தும் அவர் அதனை மீறி ஆயுதம் தொடர்பான குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ரயன் கூடுதலாக 106 நாள்களைச் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
அவர் மீதான வழக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
கண்மூடித்தனமாக நடந்துகொண்டு காயம் விளைவித்த குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், ஒவ்வொரு குற்றத்திற்கும் அவருக்கு ஓராண்டு வரை சிறையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

