மணமுறிவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தம்பதிகளிடையே சொத்துகளைப் பிரித்துத் தருவது தொடர்பாக முடிவெடுக்க புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்கீழ் இருதரப்பினரையும் சாராத நிதி நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.
கணவன்-மனைவி இருவரும் மணமுறிவு செய்துகொள்ள முடிவெடுத்துள்ள வழக்குகளில் மட்டும் இந்த அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும். இந்த அறிமுகத் திட்டம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடங்கும்.
அதன்படி சில மணமுறிவு வழக்குகளில் நிதி நிபுணர்களுடன் குடும்ப நல நீதிமன்றம் ஒன்றிணைந்து செயல்படும்.
மணமுறிவு செய்துகொள்ள முடிவெடுத்துள்ள தம்பதியர் நிதி தொடர்பான சர்ச்சைகளை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு நிபுணத்துவ உதவி கிடைக்க இப்புதிய திட்டம் வழிவகுக்கும் என்று குடும்ப நல நீதிமன்றமும் சிங்கப்பூர் கணக்காளர் கழகமும் நேற்று தெரிவித்தன.
தற்போது நிதி தொடர்பான பிரச்சினைகள் எழும்போது அவற்றை நீதிபதி தீர்க்க வேண்டி உள்ளது.
இதனால் மணமுறிவு வழக்குகள் முடிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்குச் செலவு அதிகமாகிறது.
அதுமட்டுமல்லாது, பிரிய முடிவெடுத்துள்ள கணவன்-மனைவி இடையே பகைமை உண்டாகும் சாத்தியமும் அதிகமாகிறது.
நீதிபதி தமது முக்கியப் பணிகளில் கவனம் செலுத்த புதிய திட்டம் வகை செய்கிறது.
"நிதி நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படுவதால் சொத்து களைப் பிரிப்பதில் சர்ச்சைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இதன்மூலம் துரிதமான முறையில் நீதி வழங்கப்படும்.
மணமுறிவு வழக்குகளுக்குப் புதிய திட்டம் பெரிதும் கை கொடுக்கும் என்று வழக்கறிஞர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

