சிங்கப்பூர்-பிரிட்டன் தாராள வர்த்தக உடன்பாடு இன்று காலை நடப்புக்கு வந்தது

சிங்கப்பூர்-பிரிட்டன் தாராள வர்த்தக உடன்பாடு இன்று காலை நடப்புக்கு வந்தது

2 mins read
5d8f9d10-bfaa-4787-bb72-e27fa5c2bbb9
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்-பிரிட்­டன் தாராள வர்த்­தக உடன்­பாடு இன்று ஜன­வரி 1ஆம் தேதி சிங்­கப்­பூர் நேரப்­படி காலை 7 மணிக்கு நடப்­புக்கு வந்தது. இத­னை­ய­டுத்து ஐரோப்­பிய ஒன்­றி­யம்-சிங்­கப்­பூர் தாராள வர்த்­தக உடன்­பாடு பிரிட்­ட­னுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடைப்­பட்ட வர்த்­த­கத்­தில் செல்­லு­ப­டி­யா­காது என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

பிரிட்­டன்-சிங்­கப்­பூர் தாராள வர்த்­தக உடன்­பாடு 2020 டிசம்­பர் 10ஆம் தேதி கையெ­ழுத்­தா­னது.

வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங், பிரிட்­டிஷ் அனைத்­து­லக வர்த்­தக துணை அமைச்­சர் எலி­ச­பெத் டுரூஸ் இரு­வ­ரும் அதில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

அந்த உடன்­பாட்டை நடப்­புக்கு கொண்டு வரு­வ­தற்­கான உள்­ளூர் நடை­மு­றை­களை இரு நாடு­களும் பூர்த்தி செய்து இருக்­கின்­றன.

அதை ஏற்­றுக்­கொண்டு அமல்­படுத்­தும் வரை இந்­தத் தற்­கா­லிக ஏற்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கும்.

ஐரோப்­பிய ஒன்­றி­யம்-சிங்­கப்­பூர் உடன்­பாட்­டின் கீழ் பெற்று வந்த அதே நன்­மை­க­ளை இந்த உடன்­பாட்­டின் கீழ் நிறு­வ­னங்­கள் தொடர்ந்து அனு­ப­விக்­க­லாம்.

பிரிட்­ட­னுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யில் வர்த்­த­கம் இடம்­பெ­றும்­போது அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு இந்­தச் சலுகை இருக்­கும்.

சரக்­கு­க­ளுக்­கான தீர்வை அக­லும்; சேவை­களை எட்­டு­வ­தற்­கான வழி­கள் கூடும்; அர­சாங்கக் கொள்­மு­தல் சந்­தை­க­ளை­யும் நிறு­வ­னங்­கள் எளி­தாக எட்­ட­லாம்.

மோட்­டார் வாக­னங்­கள், ரசா­ய­னங்­கள், ஜவுளி, மின்­ன­ணுப் பொருட்­கள், இயந்­தி­ரங்­கள், மருந்துப் பொருட்­கள், பெட்­ரோ­லிய ரசா­ய­னப் பொருட்­கள் ஆகி­யவை உள்­ளிட்ட ஏற்­று­ம­தி­க­ளைப் பொறுத்தவரை இரு நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும் தாராள, நீக்­குப்­போக்­கான விதி­மு­றை­கள் நடப்­பில் இருக்க உடன்­பாடு வகைசெய்யும்.

சிங்­கப்­பூ­ரில் தயா­ரிக்­கப்­படும் ஆசிய உண­வுப்­பொ­ருட்­களை சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் பிரிட்­டிஷ் சந்­தை­யில் விற்­பனை செய்ய வச­தி­கள் அதி­க­மாக இருக்­கும்.

அத்­த­கைய பொருட்­கள் பிரிட்­ட­னில் தீர்வை இல்­லா­மல் உள்ளே நுழைய முடி­யும். ஆசி­யான் உறுப்பு நாடு­களில் இருந்து பெறப்­படும் சாத­னங்­க­ளை­யும் பகு­திப் பொருட்­களை­யும் இருநாட்டு நிறு­வ­னங்­கள் பரஸ்பரம் சந்­தைப்­ப­டுத்த முடி­யும் என்று வர்த்­தக தொழில் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர், பிரிட்­டன் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டும்­போது அவர்­கள் எதிர்­நோக்­கக்­கூடிய அனா­வ­சிய தொழில்­நுட்­பத் தடை­களை உடன்­பாடு அகற்­றும்.