சிங்கப்பூர்-பிரிட்டன் தாராள வர்த்தக உடன்பாடு இன்று ஜனவரி 1ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 7 மணிக்கு நடப்புக்கு வந்தது. இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியம்-சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்பாடு பிரிட்டனுக்கும் சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட வர்த்தகத்தில் செல்லுபடியாகாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டன்-சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்பாடு 2020 டிசம்பர் 10ஆம் தேதி கையெழுத்தானது.
வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், பிரிட்டிஷ் அனைத்துலக வர்த்தக துணை அமைச்சர் எலிசபெத் டுரூஸ் இருவரும் அதில் கையெழுத்திட்டனர்.
அந்த உடன்பாட்டை நடப்புக்கு கொண்டு வருவதற்கான உள்ளூர் நடைமுறைகளை இரு நாடுகளும் பூர்த்தி செய்து இருக்கின்றன.
அதை ஏற்றுக்கொண்டு அமல்படுத்தும் வரை இந்தத் தற்காலிக ஏற்பாடுகள் நடப்பில் இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியம்-சிங்கப்பூர் உடன்பாட்டின் கீழ் பெற்று வந்த அதே நன்மைகளை இந்த உடன்பாட்டின் கீழ் நிறுவனங்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம்.
பிரிட்டனுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் வர்த்தகம் இடம்பெறும்போது அந்த நிறுவனங்களுக்கு இந்தச் சலுகை இருக்கும்.
சரக்குகளுக்கான தீர்வை அகலும்; சேவைகளை எட்டுவதற்கான வழிகள் கூடும்; அரசாங்கக் கொள்முதல் சந்தைகளையும் நிறுவனங்கள் எளிதாக எட்டலாம்.
மோட்டார் வாகனங்கள், ரசாயனங்கள், ஜவுளி, மின்னணுப் பொருட்கள், இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் ஆகியவை உள்ளிட்ட ஏற்றுமதிகளைப் பொறுத்தவரை இரு நாட்டு நிறுவனங்களுக்கும் தாராள, நீக்குப்போக்கான விதிமுறைகள் நடப்பில் இருக்க உடன்பாடு வகைசெய்யும்.
சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் ஆசிய உணவுப்பொருட்களை சிங்கப்பூர் நிறுவனங்கள் பிரிட்டிஷ் சந்தையில் விற்பனை செய்ய வசதிகள் அதிகமாக இருக்கும்.
அத்தகைய பொருட்கள் பிரிட்டனில் தீர்வை இல்லாமல் உள்ளே நுழைய முடியும். ஆசியான் உறுப்பு நாடுகளில் இருந்து பெறப்படும் சாதனங்களையும் பகுதிப் பொருட்களையும் இருநாட்டு நிறுவனங்கள் பரஸ்பரம் சந்தைப்படுத்த முடியும் என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், பிரிட்டன் ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபடும்போது அவர்கள் எதிர்நோக்கக்கூடிய அனாவசிய தொழில்நுட்பத் தடைகளை உடன்பாடு அகற்றும்.

