இளம் குடும்பங்களை மையமாகக் கொண்ட கலந்துரையாடல் தொடரை அரசாங்கம் தொடங்கவிருக்கிறது. கொவிட்-19 கொள்ளைநோயின் விளைவாக வீட்டிலிருந்து வேலை செய்யும் போக்கு பற்றியும் அந்தப் போக்கு நிரந்தரமாக அமையுமானால் அதை அந்தக் குடும்பங்கள் எவ்வாறு எதிர்கொள்ளும் போன்ற விவரங்களையும் இந்தக் கலந்துரையாடல்கள் கேட்டறியும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.
"இளம் தம்பதியினருக்குக் கடந்த ஆண்டு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. சிலர் தங்கள் திருமண விழாவைத் தள்ளி வைத்தனர். சிலர் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை ஒத்தி வைத்தனர்.
"இதுபோன்ற பிரச்சினைகள் பற்றியும் கொள்ளைநோய்க்குப் பிந்திய காலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, தேவைகள் போன்றவையும் கலந்துரையாடலில் பேசப்படும்," என்றும் தேசிய மக்கள் தொகை மற்றும் திறனாளர் பிரிவை மேற்பார்வையிடும் அமைச் சருமான குமாரி இந்திராணி, "குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும் பெற்றோர்நிலையை ஊக்குவிப்பதும் இந்தக் கலந்துரையாடல் தொடரின் முக்கிய நோக்கம்," என்று கூறினார்.
"வீட்டிலிருந்து வேலை செய்யும் போக்கை விரும்பும் சிலர் அதில் நீக்குப்போக்குத்தன்மை உள்ளது என்கின்றனர். சிலர் அதை உளைச்சல்மிகுந்த ஒன்றாகக் கருதுகின்றனர்.
"கொவிட் காலத்துக்கு முன் வீட்டிலிருந்து வேலை செய்யும் போக்கு மிகவும் சிரமமானது என்று பல முதலாளிகளும் பல ஊழியர்களும் நினைத்தனர். ஆனால் முன்பு முடியாதது என்று நினைத்தது இன்று புதிய வழக்கமாகி விட்டது. பலர் வீட்டிலிருந்து வேலை செய்யும் போக்குக்குப் பழகி விட்டனர்.
"தடுப்பூசி போட்ட பிறகு, எல்லாம் வழக்கநிலைக்குத் திரும்பினாலும், வீட்டிலிருந்து வேலை செய்யும் போக்கு மட்டும் மறையாது," என்றும் தேசிய வளர்ச்சி மற்றும் நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சருமான இந்திராணி விவரித்தார். அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட வீட்டிலிருந்து வேலை செய்யும் நீக்குப்போக்கு முறையில் அரசாங்கம் இளம் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது ஆராயப்படும்.
இந்தக் கலந்துரையாடல்கள் வழி இளம் குடும்பங்களின் விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை அறிந்துகொள்ள நம்பிக்கை கொண்டுள்ள அமைச்சர், இதன் மூலம் அவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் தனது கொள்கைகளில் மாற்றங்களைச் செய்யவும் புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தவும் முடியும் என்றும் கூறினார்.
கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு நேற்று வருகையளித்த குமாரி இந்திராணி பின்னர் மெய்நிகர் வழி உரையாற்றினார். மெய்நிகர் வழியாக நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் தொடர் கலந்துரையாடல்கள் இவ்வாண்டு முதலாம் காலாண்டுக்குப் பிறகு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

