'கிராப்' ஓட்டுநருக்குத் தொற்று: சமூகப் பரவலுக்கான சாத்தியம் குறைவு

'கிராப்' ஓட்டுநருக்குத் தொற்று: சமூகப் பரவலுக்கான சாத்தியம் குறைவு

1 mins read
007142d5-41f0-4aca-bed7-08f07a8df694
-

பகுதி நேர 'கிராப்' ஓட்டுநராகப் பணிபுரிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த ஓட்டுநருடன் காரில் பயணம் செய்தவர்களைக் கிருமி தொற்றும் அபாயம் பற்றி மக்களுக்குக் கவலை எழுவது இயல்பு என்றாலும், ஏற்கெனவே பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் இருப்பதால், புதிதாக கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகும் சாத்தியம் குறைவு என்று நிபுணர்கள் கருத்துரைத்து உள்ளனர்.

அந்த 48 வயது ஓட்டுநரிடம் இருந்து பயணிகளுக்கு கிருமி தொற்றும் அபாயம் இருந்தாலும் தொடர்புகளின் தடமறிதல், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் கிருமிப் பரவலை மட்டுப்படுத்த முடியும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொது சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டியோ யிக் யிங் கூறி உள்ளார்.

இச்சம்பவம் பயணிகளுக்கு நிச்சயமாக கவலை தரக்கூடிய ஒன்று என்று சாவ் சுவீ ஹாக் பள்ளியின் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் சொன்னார்.என்றாலும், முகக்கவசம் அணியும் கட்டாய நடைமுறை நடப்பில் இருப்பதால் நீர்த்துளிகள் பரவும் சாத்தியம் குறையும் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட ஓட்டுநர் செலுத்திய அந்த காரில் பயணம் செய்தவர்கள் அனைவரையும் 'கிராப்' நிறுவனத்தால் அடையாளம் காண முடிந்ததையும் பேராசிரியர் குக் சுட்டினார்.