கொரோனா கிருமிப் பரவல் சூழலால் கடந்த ஆண்டு பொழுதுபோக்குப் பயணங்களை மேற்கொள்ள முடியாததால் சிங்கப்பூரில் பல ஊழியர்கள் தங்களது வருடாந்திர விடுப்பு முழுவதையும் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத விடுப்பு நாட்கள் அவற்றுக்கு அடுத்த ஆண்டு செல்லுபடியாகாவிட்டாலும், இம்முறை சில அமைப்புகள் தங்களது ஊழியர்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களை இவ்வாண்டு எடுக்க அனுமதித்துள்ளன.
ஊழியர்களின் சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள் வீண்போகாமல் இருப்பதை உறுதி செய்ய மற்ற சில நிறுவனங்கள் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஊழியர்கள், மாணவர் உதவி மற்றும் அறக்கட்டளைக்காக மொத்தம் 20,145 விடுப்பு நாட்களை நன்கொடை அளித்து உள்ளனர்.
நன்கொடையாக வழங்கப்பட்ட 1,800க்கும் அதிகமான என்டியு ஊழியர்களின் இந்த விடுப்பு நாட்களின் மதிப்பு $10.25 மில்லியன். ஒவ்வோர் ஊழியரும் சராசரியாக 11 விடுப்பு நாட்களைத் தானம் செய்துள்ளார்.ஓசிபிசி வங்கி கடந்த ஆண்டு அதன் விடுப்புக் கொள்கையை மாற்றியது. ஊழியர்கள் பயன்படுத்தப்படாத விடுப்பு நாட்களை இவ்வாண்டு எடுக்க அது அனுமதித்து உள்ளது.
மேலும், ஊழியர்கள் தங்களது வருடாந்திர விடுப்பின் ஐந்து நாட்கள் வரை பணமாக மாற்றிக்கொள்ளவும் தெரிவு செய்யலாம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'மைக்ரோன்' தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் மொத்தம் $1.88 மில்லியனைத் திரட்டினர். அதாவது, ரொக்க நன்கொடை மூலமாகவும் வருடாந்திர விடுப்பு நாட்களைப் பணமாக மாற்றியும் அவர்கள் இந்த நிதியைத் திரட்டினர்.
திரட்டப்பட்ட இந்த நிதி 'தி ஃபுட் பேங் சிங்கப்பூர்' உள்ளிட்ட ஐந்து அறக்கொடை அமைப்புகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதற்கிடையே, பயன்படுத்தப்படாத தங்களது விடுப்பை எடுக்க அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விடுப்பின் ஒரு பகுதியைப் பணமாக்கிக்கொள்ளும் தெரிவும் அவர்களுக்கு இவ்வாண்டு வழங்கப்படுகிறது.
ஏறக்குறைய 85,000 அரசாங்க ஊழியர்கள் தங்களது 2019ன் வருடாந்திர விடுப்பு நாட்கள் கடந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தப்படாத பட்சத்தில், அவற்றின் பாதியளவை இவ்வாண்டு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
அவ்வாறு செய்தும் அவர்களுக்கு விடுப்பு எஞ்சியிருந்தால் அதைப் பணமாக்கிக்கொள்ளலாம். பொதுச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், 2019ல் பயன்படுத்தப்படாத விடுப்பை இவ்வாண்டு எடுக்கவோ அதைப் பணமாக்கிக்கொள்ளவோ முடியும்.
2020ல் பயன்படுத்தப்படாத விடுப்பு நாட்களில் மூன்றில் ஒரு பகுதியை அவர்கள் இவ்வாண்டு எடுக்கலாம், அல்லது அவற்றைப் பணமாக்கிக்கொள்ளலாம்.

