பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் நீர்மட்டம் உயர்ந்ததைக் காட்டும் படங்களை நேற்று இணையத்தில் பார்த்த சிலர், அங்கு வெள்ளம் ஏற்பட்டுவிட்டது என்று நினைத்துவிட்டார்கள்.
ஆனால் அந்தப் பூங்கா அதன் பணியைச் செவ்வனே செய்துவந்தது என்பதுதான் உண்மை. மழை நீரை வடியவிடும் ஒரு கால்வாயாக அந்தப் பூங்கா செயல்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று நீர்மட்டம் உயர்ந்தது. இருந்தாலும் அந்தப் பூங்காவின் நீர்வழி வழக்கமாகச் செயல்பட்டது.
காலாங் ஆற்றின் ஒரு பகுதி அந்தப் பூங்கா வழியாகச் செல்கிறது. அந்தப் பகுதி 3 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் ஏறி இறங்கினாலும் அதைச் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்தப் பூங்காவில் பல பாதுகாப்பு அறிவிப்புகளைக் காணலாம் என்றும் அதன்மூலம் பொதுமக்கள் நீர்மட்டம் உயர்வதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்றும் தேசிய பூங்காக் கழகம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டது.
அங்கு ஆற்றுக் கண்காணிப்புச் சாதன முறை அமைக்கப்பட்டு இருக்கிறது. கடும் மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் அது பற்றி முன்னதாகவே எச்சரிக்கை செய்யும் உணர்வுச் சாதனங்கள் அதில் உள்ளன. அந்த ஆற்றுப் பகுதி நெடுகிலும் எச்சரிக்கை அறிவிப்புகள், சிவப்பு எச்சரிக்கை அடையாளங்கள், உயிர்காப்புச் சாதனங்கள், பிரத்தியேக படச் சாதனங்கள் எல்லாம் அமைக்கப்பட்டு இருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்தது.
'துடிப்புமிக்க, அழகுமிக்க, தூய்மைமிக்க நீர்நிலைச் செயல்திட்டம்' என்ற ஒரு திட்டத்தின் கீழ் பொதுப் பயனீட்டுக் கழகமும் தேசிய பூங்காக் கழகமும் சேர்ந்து அந்த ஆற்று வடிகால் பகுதியை 2009 முதல் 2012 வரை கூட்டுத் திட்டமாக உருமாற்றின.
நகரின் பல வடிகால் கட்டமைப்புடன் அந்த ஆற்று வடிகால் தொடர்புடையது என்று பொதுப் பயனீட்டுக் கழக இணையத்தளம் குறிப்பிடுகிறது.
அந்தப் பூங்கா வழியாகச் செல்லும் ஆற்றுப் பகுதி 'நீர் உள் வாங்கும் தரைப்பகுதி' என்ற கோட்பாடு அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஓர் ஓடைக்கு அல்லது ஆற்றுக்கு அருகே ஒரு நிலப்பகுதி அமைக்கப்படும். ஆற்றில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அந்த நீரை, அந்த நிலப்பகுதி உள் வாங்கிக்கொண்டு பிறகு வடியவிட்டுவிடும்.
மழை இல்லாத வெயில் காலத்தின்போது அப்பூங்காவில் நடுவே இருக்கும் ஓடை போன்ற சிறு பகுதி யில்தான் தண்ணீர் ஓடும்.
கடும் மழை பெய்யும்போது பக்கத்தில் இருக்கும் தரைப்பகுதி நீரை உள் வாங்கிக்கொண்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வடிய செய்துவிடும்.

