கொள்ளைநோய் வாட்டியதன் காரணமாக, சுதந்திரம் பெற்ற 1965ஆம் ஆண்டு முதல் இதுவரை கண்டிராத பொருளியல் சரிவை சிங்கப்பூர் சந்தித்தபோதிலும் சிங்கப்பூரர்களின் நன்கொடை கடந்த ஆண்டில் சாதனை அளவை எட்டியது. இணையம் வழியாக ஏராளமான நன்கொடைகளை அவர்கள் அள்ளிக்கொடுத்து உதவி இருக்கிறார்கள். அந்த வகையில் Giving.sg இணையத்தளம் கடந்த ஆண்டில் $84 மில்லியனுக்கும் மேலான நன்கொடைகளைப் பெற்றது. இது ஒரு சாதனை அளவான நன்கொடைத் தொகை.
மேலும், கொவிட்-19 கிருமி பற்றி அறியப்படாத 2019ஆம் ஆண்டில் கிடைத்ததைக் காட்டிலும் இத்தொகை இருமடங்கிற்கும் மேல். இந்த நன்கொடை இணையத்தளம், 'என்விபிசி' எனப்படும் தேசிய தொண்டூழியம் மற்றும் கொடையாளர் நிலையத்தால் நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள 580க்கும் மேற்பட்ட அறநிறுவனங்கள் நிதித் திரட்டுக்காக இதனைப் பயன்படுத்துகின்றன.
கொரோனா சூழ்ந்த 2020ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரையில் $84.4 மில்லியன் நன்கொடை திரண்டதாக நிலையத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ெசய்தித்தாளிடம் தெரிவித்தார். இது 2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் $35.8 மில்லியனாக இருந்தது. மேலும், பல்வேறு அறநிறுவனங்களில் இணைந்து தொண்டூழியம் புரியவும் அதிகமானோர் முன்வந்தனர். 2019ஆம் ஆண்டில் 28,200 பேராக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 32,100ஆக உயர்ந்தது. அதிக கொடை திரண்டது குறித்து 'என்விபிசி'யின் இயக்குநர்களில் ஒருவரான ஜெஃப்ரி டான் விளக்கினார்.
"தேவை உள்ளோருக்கு அள்ளிக்கொடுக்கும் சிங்கப்பூரர்களின் தாராளகுணம் கொவிட்-19 சூழலில் நன்கு வெளிப்பட்டது. பொதுமக்கள், அமைப்புகள், தலைவர்கள் என எல்லாத் தரப்பினரும் சிரமப்படும் மக்களுக்கு உதவ முன்வந்தது எங்கள் உள்ளத்தைக் கவர்ந்தது.
"கொள்ளைநோய் பரவல் காரணமாக பெரிய அளவில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடைபெறாததால் அறநிறுவனங்கள் நிதித் திரட்டுக்காக மாற்று வழியைத் தேடியபோது அவர்களுக்கு Give.sg போன்ற இணையத்தளங்கள் உதவிக்கரம் நீட்டின," என்றார் அவர்.
அறப்பணிகளுக்கும் சிரமப்படும் குடும்பங்களுக்கும் உதவ 'ரே ஆஃப் ஹோப்' இணையத்தளம் வழியாகவும் $3.5 மில்லியன் நன்கொடைகளை அளித்தனர். இதுவும் 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். அந்த ஆண்டில் இந்த இணையத்தளம் $550,000 மட்டுமே பெற்று இருந்தது. ஏராளமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 தொடர்பான நிதித் திரட்டு நடவடிக்கைகளுக்கும் ஏராளமானோர் பெருந்தன்மையுடன் உதவியதாக 'ரே ஆஃப் ஹோப்' இணையத்தளத்தின் பொது மேலாளர் டான் என் கூறினார். 'ஃப்ரீ ஃபுட் ஃபார் ஆல்', 'கேர் சிங்கப்பூர்' போன்ற நன்கொடை இணையத்தளங்கள் வழியாகவும் ஏராளமானோர் உதவி அளித்தனர்.
அறநிதி இரவு விருந்து, நிதித் திரட்டு கோல்ஃப் விளையாட்டு போன்றவற்றை நடத்த இயலாததால் கடந்த ஆண்டு நிதித் திரட்டு நடவடிக்கைகளுக்குச் சவாலாக அமைந்தது என்று அறப்பணி மன்றத்தின் தலைவர் ஜெரர்ட் ஈ தெரிவித்தார். பல்வேறு இணையத்தளங்களுக்கு நன்கொடை வந்து குவிந்த போதிலும் 'லயன்ஸ் பிஃபிரண்டர்ஸ்' இணைய நன்கொடைக்கு கடந்த ஆண்டு 30 விழுக்காட்டு நன்கொடை சரிவைச் சந்தித்தது.
பெருமளவிலான மக்கள் திர ளும் கொடி நாள், அறப்பணி கோல்ஃப் போன்ற நிகழ்வுகளைச் சார்ந்து அதன் நிதித் திரட்டு நடவடிக்கைகள் இருந்ததும் சரிவுக்கு ஒரு காரணம் எனச் சொல்லப்பட்டது.

