'குறிப்பிட்ட நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசிதான் வேண்டும் எனத் தேர்வுசெய்ய முடியாது'
அமெரிக்காவின் மொடர்னா, சீனாவின் சினொவெக் உட்பட அடுத்த சில மாதங்களில் அதிகளவில் கொவிட்-19 தடுப்பூசிகள் சிங்கப்பூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் சிங்கப்பூரர்களுக்கும் நீண்டகாலக் குடியிருப்பாளர்களுக்கும் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசிகள் இருக்கும் என்று அமைச்சர் கான் கூறினார்.
"கொரோனா தொற்று விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் தடுப்பூசிக்கான தேவை அதிகமாக இருக்கும் நிலையில், சிங்கப்பூருக்குத் தடுப்பூசிகள் தொகுதி தொகுதியாக வந்து சேரும்," என்று திரு கான் சொன்னார்.
தடுப்பூசி தயாரிப்பையும் விநியோகிப்பையும் அதிகரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். முதலாவதாக ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவான தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதன் முதல் தொகுதி கடந்த மாதம் இங்கு வந்து சேர்ந்தது.
கடந்த புதன்கிழமை தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலைய ஊழியர்கள் 40 பேருக்கு அந்தத் தடுப்பூசி போடப்பட்டது. 21 நாள்களுக்குப் பிறகு அவர்களுக்கு அந்தத் தடுப்பூசி இரண்டாம் முறையாகப் போடப்படும்.
"கிருமித்தொற்றுக்கு எதிரான அதிகபட்ச பாதுகாப்புத் திறனை எட்ட, இரண்டாவது தடுப்பூசி போடப்பட்ட பிறகு 14 நாள்கள் தேவைப்படும்," என்று திரு கான் சொன்னார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வது தன்விருப்பத்திற்குரியது என்றாலும் தங்களுக்குக் கிடைக்கும்போது அதைப் போட்டுக்கொள்ளுமாறும் பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசி அட்டை
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோருக்குத் தடுப்பூசி அட்டை வழங்கப்படும் என்று திரு கான் கூறியுள்ளார். தடுப்பூசி கிடைக்கும்போது அதைப் போட்டுக்கொள்ள கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் தயாராக இருப்பது கருத்தாய்வுகள் மூலமாகவும் அரசாங்கத்தின் இதர சென்றடைதல் முறைகள் மூலமாகவும் தெரியவந்துள்ளது என்று அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
கூடுதல் தரவுகள் வந்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து முடிவு செய்வோம் என்று மூன்றில் ஒரு பங்கினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது என மக்களே தேர்வுசெய்துகொள்ள முடியாது என்றார் அமைச்சர்.
எந்தத் தடுப்பூசி போடப்படும், தடுப்பூசியின் இரண்டாம் பகுதி எப்போது போடப்படும், தடுப்பூசி போட்டபிறகு செய்ய வேண்டியவை குறித்த ஆலோசனைகள் ஆகியவை தடுப்பூசி அட்டையில் இடம்பெற்றிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான விவரங்கள் தேசிய நோய்த்தடுப்புப் பதிவேட்டில் சேர்க்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
முன்பதிவு அவசியம்
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி மையங்களுக்குச் செல்லுமுன் அதற்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் கான் தெரிவித்து உள்ளார். "இதன்மூலம் நடைமுறைச் செயல்திறன் உறுதிசெய்யப்பட்டு, காத்திருப்பு நேரமும் குறையும்," என்று திரு கான் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில், தங்களது முறை வரும்போது பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக மருந்தகங்களையும் தடுப்பூசி மையங்களையும் அரசாங்கம் தயார் செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இதனிடையே, புதிய, அதிகம் பரவும் திறன்கொண்ட, உருமாறிய கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பூசிகள் செயல்திறன் குன்றியவையாக இருக்கும் என்பதற்கு இப்போதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று திரு கான் கூறிஇருக்கிறார்.
உருமாறிய கிருமிக்கு எதிராகவும் தங்களது தடுப்பூசிகள் பாதுகாக்கலாம் என்று ஃபைசர் - பயோஎன்டெக், மொடர்னா நிறுவனங்கள் தெரிவித்திருப்பதையும் அதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகளில் அவை ஈடுபட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவோருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

