திருமண உறவை வலுப்படுத்த அரசாங்கம் முயற்சிகளைத் தீவிரப்படுத்துகிறது

திருமண உறவை வலுப்படுத்த அரசாங்கம் முயற்சிகளைத் தீவிரப்படுத்துகிறது

2 mins read
951985b6-b790-4d35-a8e6-75527ef01749
-

திருமணமான தம்பதிகளுக்கு அடிப்படை திருமண ஆதரவுச் சேவை வழங்க 2019 மார்ச் மாதத்தில் இருந்து 200க்கும் அதிகமானோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. திருமணங்களை வலுப்படுத்துவதற்கான அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.

திருமண வாழ்வு மோசமடைவதற்கு முன்னதாகவே அதில் தலையிட்டு நிவர்த்தி செய்ய சமூக, சமயத் தலைவர்கள் என 215 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இதன் பொருட்டு கூடுதலானோருக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்ற அவர், தம்பதிகள் தங்களது திருமண பந்தத்தை வலுப்படுத்த கூடுதலான மேம்பாட்டுத் திட்டங்களை வழங்க சமூகச் சேவை அமைப்புகளுடன் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்றார்.

தம்பதியர் மணமுறிவு செய்துகொள்ளும்போது அவர்களது பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கடந்த மாதம் வெளியிட்டிருந்த ஆய்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கேட்டதற்கு திருமதி சுன் பதிலளித்தார்.

தம்பதியர் மணமுறிவு செய்துகொள்ளும்போது அவர்களது பிள்ளைகளின் ஆரம்பகால வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம் என்று திருமதி சுன் சொன்னார். மணமுறிவால் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதுடன் பிள்ளைகளின் நேர்மறையான வளர்ச்சியையும் மேம்படுத்த வேண்டும் என்றார் அவர். இதனால், மணமுறிவு செய்துகொள்ளும் பெற்றோர் பங்கேற்க வேண்டிய பிள்ளை வளர்ப்புத் திட்டங்கள் தரும் பலனை அதிகரிக்க, அமைச்சு அவற்றைத் தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்றும் அவர் சொன்னார்.

திருமண பந்தத்தை வலுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, திருமணம் புரியவிருக்கும் தம்பதிகளைத் திருமணத்திற்குத் தயார்ப்படுத்தும் திட்டங்களில் கலந்துகொள்ள ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று திருமதி சுன் விவரித்தார்.