தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்டியுசியின் முதல் தலைவர் மஹ்முட் அவாங் காலமானார்

2 mins read
987dfe34-866c-4f48-91ee-095bd142d33f
-

தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவரும் பிரபல தொழிற்சங்கவாதியுமான திரு மஹ்முட் அவாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 93.தொழிற்சங்கங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடைமுறை சாத்தியமுள்ள அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடிக்கிறது.

இதற்கு வித்திட்டவர் திரு மஹ்முட். சிங்கப்பூர் ஊழியர்களின் சம்பளத்தையும் வேலைச் சூழலையும் மேம்படுத்த அவர் உதவினார். திரு மஹ்முட் 1928ஆம் ஆண்டில் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள குளுவாங்கில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின்போது அப்போது செம்பவாங்கில் இருந்த கடற்படைப் பள்ளியில் வேலை செய்ய ஜப்பானிய படையினர் அவரையும் சேர்த்து பல இளையர்களை சிங்கப்பூருக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தனர்.

போருக்குப் பிறகு அவர் குளுவாங் திரும்பினார். ஆனால் வேலை தேடி அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்பினார். பேருந்துச் சேவை நிறுவனத்தில் சேர்ந்து பேருந்து நடத்துநராக அவர் பணிபுரிந்தார்.

1955ஆம் ஆண்டில் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து தங்களுக்கு வழங்கப்பட்ட குறைந்த சம்பளத்தை எதிர்த்து ஐந்து மாத வேலை நிறுத்தப் போராட்டத்தில் திரு மஹ்முட் ஈடுபட்டார்.அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைக் குறுகிய காலத்துக்குத் தடுப்புக் காவலில் வைத்தது.

விடுதலையானதும் அவர் அம்னோவில் இணைந்தார். ஆனால் அக்கட்சி மற்ற இனத்தவர்களை நியாயமான முறையில் நடத்தவில்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1959ஆம் ஆண்டில் அவர் அக்கட்சியிலிருந்து விலகினார்.

இதற்கிடையே, திரு மஹ்முட்டின் தலைமைத்துவப் பண்புகள் அவருக்குப் புகழைத் தேடித் தந்தது. அவர் வேலை பார்த்த பேருந்துச் சேவை நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியை அவர் பல ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக்கொண்டார். 1960ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வர்த்தக தொழிற்சங்க காங்கிரஸின் தலைவரானார் திரு மஹ்முட். அதையடுத்து, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) நிறுவப்பட்டதும் அதன் முதல் தலைவராகப் பதவி ஏற்றார்.

தொழிற்சங்கங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் முறையை அவர் கடைப்பிடித்தார்.

1961ஆம் ஆண்டில் ஆன்சன் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் டேவிட் மார்ஷலிடம் அவர் ஏறத்தாழ 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 1963ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கம்போங் கப்பூர் தொகுதியில் போட்டியிட்ட திரு மஹ்முட் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். 1968ஆம் ஆண்டில் அவர் அரசியலிலிருந்து விலகினார்.

திரு மஹ்முட்டின் மரணம் குறித்து பிரதமர் லீ சியன் லூங் வருத்தம் தெரிவித்தார். திரு மஹ்முட்டின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.