சிங்கப்பூர் இவ்வாண்டு மே மாதம் ஏற்று நடத்தவிருக்கும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் பங்கேற்கும் பேராளர்களுக்குக் கடுமையான கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும்.அவர்கள் அனைவரும் சிங்கப்பூரின் பொதுச் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
பயணத்துக்கு முந்திய பரிசோதனை, சிங்கப்பூர் வந்தடைந்ததும் பரிசோதனை, கருத்தரங்கு நடைபெறும் இடம் மற்றும் அவர்கள் செல்லும் மற்ற இடங்களில் கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் என கொவிட்-19 தொடர்பான எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அவர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
"வெளிநாடுகளிலிருந்து வரும் அவர்கள் மூலம் உள்ளூரில் சமூக கிருமித்தொற்று ஏற்படுவதைக் குறைக்கும் வகையில், உள்ளூர் சமூகத்தினர், நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் ஆகியோருடனான பரிமாற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று திரு டான் விவரித்தார்.
இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் திரு யிப் ஹோன் வெங், "உலகப் பொருளியல் கருத்தரங்கு பங்கேற்பாளர்களின் சுகாதாரத் தகுதி உறுதி செய்யப்படுமா? ஒருவேளை கிருமித்தொற்று நிலவரம் மோசமடைந்து, நாட்டின் எல்லைகள் மூடப்படும் பட்சத்தில் கருத்தரங்கை நடத்துவதற்கு மாற்று ஏற்பாடுகள் உள்ளதா?" என்று கேள்விகள் எழுப்பியிருந்தார். அவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர், "குறிப்பிட்ட பொதுச் சுகாதாரச் தகுதிகள், கருத்தரங்கின் மாற்று ஏற்பாடுகள் ஆகியவை பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அப்போது சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதுமான கொவிட்-19 நிலவரமும் கருத்தில் கொள்ளப்படும்.
"இந்தக் கருத்தரங்கில் நாம் மேற்கொள்ளவிருக்கும் சுகாதாரத் தகுதி நடைமுறைகள் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஒரு முன்னோடியாகத் திகழும்," என்று விளக்கினார்.
உலகப் பொருளியல் கருத்தரங்கு அமைப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் விடுத்த அறிக்கையில், ஐரோப்பாவில் உள்ள கொவிட்-19 நிலவரத்தைத் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த இந்த வருடாந்திர கருத்தரங்கு சிங்கப்பூருக்கு மாற்றப்படுகிறது என்று தெரிவித்தது. இந்த வருடாந்திர கூட்டத்தில் முன்னணி அரசியல் தலைவர்கள், வர்த்தக தலைவர்கள், கல்வியாளர்கள் போன்றோர் கூடி, உலகின் அக்கறைக்குரிய விவகாரங்கள் பற்றி விவாதிப்பார்கள்.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கில் கிட்டத்தட்ட 3,000 பேராளர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு மே மாதம் 13 முதல் 16ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு, 2022ல் மீண்டும் சுவிட்சர்லாந்தில் நடைபெறும். மேலும் பேசிய அமைச்சர் டான், "இந்தக் கருத்தரங்கில் மேலும் பலர் பங்கேற்கும் வகையில் மெய்நிகர் அங்கமும் சேர்த்துக்கொள்ளப்படும்.
"இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் திறனாளர்களின் பங்களிப்பு இருக்கும் வகையில், கருத்தரங்கின் ஏற்பாட்டாளரான 'பப்ளிசிஸ்லைவ்' நிறுவனம், ஆர்வமுள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கும்.
"கொவிட்-19 கொள்ளைநோய்க்கு இடையே, கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தும் முக்கியமான பொருளியல், வர்த்தக நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் ஏற்று நடத்த முடியும் என்று உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு," என்றும் துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறினார்.

