நேற்று முன்தினம் ஹவ்காங் ஸ்திரீட் 22 புளோக் 244ன் மூன்றாவது மாடி வீட்டின் சன்னலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுவனை பங்ளாதேஷை சேர்ந்த ஊழியர் திரு தாஸ் டிப்டோ காப்பாற்றினார்.
பத்திரமாக மீட்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு ஆறு வயது என்று நம்பப்படுகிறது. சிறுவனைக் காப்பாற்றியது தமக்கு மனநிறைவைத் தருவதாக திரு டிப்டோ தெரிவித்தார். இதுவே வாழ்வில் தாம் செய்த மிகச் சிறந்த செயல் என்று அந்த 27 வயது ஆடவர் பெருமிதத்துடன் கூறினார்.
சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பங்ளாதேஷிலிருந்து இங்கு வந்தார்.
மேலே உயரும் பாரந்தூக்கியைத் தாமும் தமது சக ஊழியருமான திரு பிஸ்வாஸ் ஜிபோமும் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது பெண் ஒருவர் பதற்றத்
துடன் தங்களை அணுகியதாக திரு டிப்டோ கூறினார்.
"சன்னலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனை அவர் எங்களிடம் காட்டினார். சிறுவனின் வீட்டுக் கதவு பூட்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"பாரங்தூக்கியைப் பயன்படுத்தி சிறுவனைக் காப்பாற்றுவதுதான் சிறந்த வழி என்பதை நான் உணர்ந்தேன். கீழிலிருந்து திரு பிஸ்வாஸ் வழிகாட்ட, பாரந்தூக்கியை இயக்கி அழுதுகொண்டிருந்த சிறுவனை திரு டிப்டோ பத்திரமாக மீட்டார்.
இதைப் பார்த்து அங்கு கூடியிருந்த கூட்டம் ஆரவாரம் செய்தது. சிறுவனை திரு டிப்டோ காப்பாற்றுவதைக் காட்டும் காணொளியை பங்ளாதேஷில் இருக்கும் திரு டிப்டோவின் தாயார் பார்த்து தமது மகனைத் தொடர்புகொண்டு பாராட்டினார். நற்செயலில் ஈடுபட்ட திரு டிப்டோவுக்கும் திரு பிஸ்வாசுக்கும் வெகுமதி அளிக்க திட்டமிட்டிருப்பதாக அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

