பாட்டாளிக் கட்சியில் இளைய உறுப்பினர்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் கொள்கை வகுக்கும் குழுவின் கூட்டத்தில் அவர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டன.
செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான 37 வயது திருமதி ஹி டிங் ரு, சென்ற தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் போட்டியிட்ட 43 வயது திரு கென்னத் ஃபூ ஆகிய இருவரும் கட்சியின் மத்திய செயற்குழுவின் துணை அமைப்புச் செயலாளர்களாக நியமனம் பெற்றனர். இந்தப் பதவியை வகித்த திருமதி ஹியின் கணவரான திரு டெரன்ஸ் டான் தற்போது மத்திய செயற்குழு உறுப்பினராக இல்லை.
செங்காங் குழுத்தொகுதியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான 27 வயது திருமதி ரயீஷா கான், துணைப் பொருளாளர் பதவியிலிருந்து விலகிய குமாரி லீ லி லியன் பொறுப்பை ஏற்றுள்ளார். அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியோன் பெரேரா, கட்சியின் ஊடகக் குழுவின் தலைவராகியுள்ளார். அவர் முன்பு அக்குழுவின் துணைத் தலைவராகவும் கட்சியின் இளையர் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.
முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் இணைப் பேராசிரியர் திரு டேனியல் கோ, ஊடகக் குழுவின் தலைவராக இருந்தார். செங்காங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லுயிஸ் சுவா, 33, ஊடகப் பிரிவின் துணைத் தலைவராகவும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் வேட்பாளர் திருமதி நிக்கோல் சியா 34, அக்கட்சியின் இளையர் பிரிவின் தலைவராகவும் பதவியேற்றுள்ளனர்.
பாட்டாளிக் கட்சி, இரண்டு புதிய பதவிகளை உருவாக்கியுள்ளது. கொள்கை ஆய்வுக் குழுவின் தலைவராக அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெரால்டு கியாம், 44, அக்குழுவின் துணைத் தலைவராக செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜேமஸ் லிம், 44, ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
திரு கியாம் கட்சியின் பொருளாளராக நீடிக்கிறார். கட்சியின் மத்திய செயற்குழுவின் மற்ற பதவிகளில் மாற்றங்கள் இல்லை. அல்ஜுனிட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஃபைசல் மனாப், 45, துணைத் தலைவராகவும் ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டென்னிஸ் டான் அமைப்புச் செயலாளராகவும் மீண்டும் பதவி நியமனம் பெற்றனர்.
மத்திய செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் கட்சித் தலைவர் திரு லோ தியா கியாங், 64, முன்னாள் ஹவ்காங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பிங் எங் ஹுவாட் இருவரும் தொடர்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதியன்று நடந்த உட்கட்சித் தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் பொதுச்செயலாளராக 44 வயது திரு பிரித்தாம் சிங்கும் தலைவராக 55 வயது திருமதி சில்வியா லிம்மும் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர்.

