புதிய கிருமித்தொற்று குழுமமாக மாறியுள்ள 'நியூஓஷன் 6' எண்ணெய்க் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு அதன் அனைத்து செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த அறிவிப்பு வரும் வரை கப்பலுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கப்பலை நிர்வகிக்கும் 'பாம்ஸ்டோன் டேங்கர்ஸ் & டிரேடிங்' எனும் நிறுவனம் கப்பலின் அனைத்து நடைமுறைகளையும் முறையாக பரிசீலித்த பிறகு மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் தது.
சிங்கப்பூர் கடற்பகுதியில் செயல்படும் இத்தகைய கப்பல்கள், கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்புவது உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன.
சென்ற செவ்வாய்க்கிழமை பதிவான ஒன்பது சம்பவங்கள் 'நியூ ஓஷன் 6' குழுமத்தடன் தொடர்புடையவை என்று சுகாதார அமைச்சு கூறியிருந்தது.
ஒன்பதில் முதலில் உறுதி செய்யப்பட்ட இந்தோனீசிய மாலுமி, டிசம்பர் 30ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒரு வாரத்திற்கு முன்பு டிசம்பர் 23ஆம் தேதிவாக்கில் அவருக்கு தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
இந்தோனீசியாவில் 14 நாட்கள் தனிமையில் தங்கிய பிறகு ஒர்க் பர்மிட் வைத்துள்ள இவர், டிசம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினார்.
சிங்கப்பூர் வந்ததும் இவர் உட்பட மாலுமிகளுக்கு கொவிட்-19 சோதனை நடத்தப்பட்டது.
சோதனை முடிவு தெரியும் வரை இவர்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் 58,812வது தொற்றுச் சம்பவமாக இந்தோனீசியர் அடையாளப்படுத்தப்பட்டார்.
இதற்கு முன்பு டிசம்பர் 1, 16, 17 ஆகிய தேதிகளில் மூன்று முறை நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
கடைசியாக டிசம்பர் 17ஆம் தேதி தொற்று இல்லை என்பது உறுதியானதும் அவர் 'நியூஓஷன் 6' கப்பலில் பணியாற்றத் தொடங்கினார்.
ஆனால் டிசம்பர் 30ஆம் தேதி சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருடன் இருந்த 13 மாலுமிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று ஆணையத்தின் அறிக்கை தெரி வித்தது.

