சிங்கப்பூரில் நிகழ்ந்த ஆகப்பெரிய எரிவாயு எண்ணெய் மோசடியில் கைது செய்யப்பட்ட இரண்டாமவரும் குற்றங்களில் தமக்கு பங்கு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஷெல் ஈஸ்டர்ன் பெட்ரோலிய நிறுவனத்தில் பாதுகாப்புப் பரிசோதகராகப் பணியாற்றிய முகம்மது அஷ்ரஃப் ஹம்ஸா, 39, எனப்படும் அவர் 2014ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் US$25 மில்லியன் (S$33 மில்லியன்) பெறுமான 55,321 டன் எரிவாயு எண்ெணய்யைத் திருட தமது கூட்டாளியுடன் சேர்ந்து செயல்பட்டார்.
இந்தக் கூட்டுச் சதியில் இருந்த பங்கேற்பு மூலம் அஷ்ரஃப்புக்கு குறைந்தபட்சம் $700,000 கிடைத்தது.
சிங்கப்பூரரான அவர், US$18 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புடைய எரிவாயு எண்ணெய் தொடர்பில் நம்பிக்கை மோசடி செய்த ஒன்பது குற்றச்சாட்டுகளை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார். எஞ்சிய தொகையுடன் தொடர்புடைய இதேபோன்ற இதர ஒன்பது குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
2017ஆம் ஆண்டு சுமார் $200,000 மதிப்புடைய வோல்வோ காரை வாங்கியபோது, சட்டவிரோதமாகக் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகச் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் அஷ்ரஃப் ஒப்புக்கொண்டு உள்ளார்.
தொடர்ந்து எண்ணெய்யைத் திருடி மோசடி செய்து வந்த கும்பலில் இருந்து 2016ஆம் ஆண்டு அஷ்ரஃப் விலகியதாகக் கூறப்பட்டது.
மற்றொரு ஷெல் நிறுவன ஊழியரான சடகோபன் பிரேம்நாத், 40, எனப்படும் இந்திய நாட்டவர், 2017ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த US$36.1 மில்லியன் பெறுமான எரிவாயு எண்ணெய் மோசடியில் தமக்கு இருந்த பங்கை கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்பட உள்ளது.
மேலும் இரு கூட்டாளிகளான முஸாஃபர் அலி கான் முகமது அக்ரம், 39, ஜுவான்டி புங்கோட், 44, ஆகியோர் தொடர்பிலான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் உள்ள ஷெல் நிறுவனத்தின் ஆகப்பெரிய பெட்ரோலிய ரசாயன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிலையம் புலாவ் புக்கோம் தீவில் உள்ளது.
இங்குதான் $200 மில்லியன் மதிப்பிலான 300,000 டன்னுக்கும் மேற்பட்ட எரிவாயு எண்ணெய் திருடப்பட்டது.

