மூன்று வயது சிறுமியை 'மினி வேன்' வாகனத்திற்குள் ஒரு மணி நேரத்திற்கு மேல் பூட்டி வைத்த அதன் ஓட்டுநருக்கு நேற்று நீதிமன்றத்தில் பத்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஸுல்கானை ஹரோன், 47, எனப்படும் அவர், கடந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்டோரின் விவரங்களை வெளியிடக்கூடாது என்பதால் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
சம்பவத்தன்று காலை இரண்டில் ஒரு குழந்தையை பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டுத் திரும்பிய ஸுல்கானை, வாகன உதவியாளரை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார். அதன் பின்னர் புளோக் 358ஏ அட்மிரல்டி டிரைவ் பல மாடி கார் நிறுத்தத்தில் வேனை நிறுத்தினார். இருக்கை வார் அணிந்த நிலையில் சிறுமி வாகனத்திற்குள் இருப்பது தெரிந்தும் வாகன இயந்திரத்தை அணைத்துவிட்டு செம்பவாங் எம்ஆர்டி நிலையம் அருகில் உள்ள உணவங்காடிக்கும் பேரங்காடிக்கும் அவர் சென்றுவிட்டார்.
அச்சமயம், காற்றுப்புகாத வாகனத்திற்குள் அழுது புலம்பியபடி தமது தாயை சிறுமி தேடியதை அறிந்த ஒரு தம்பதியினர் பள்ளிக்கூடத்திற்கு தகவல் அளித்தனர். இச்சம்பவம் காரணமாக மன உளைச்சல் கோளாற்றால் சிறுமி பாதிக்கப்பட்டதாக அறியப்பட்டது.
கூடுதலாக இரண்டு பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துவர பணம் தரவில்லை என்பதால் ஓட்டுநர் இவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுமிக்குப் பாதிப்பு ஏற்படுத்திய குற்றம் தவிர கடந்த ஆண்டு ஏப்ரலில் போக்குவரத்து விளக்கு எச்சரிக்கையை மீறிச் சென்ற குற்றத்திற்காக ஸுல்கானைக்கு $3,000 அபராதம் 12 மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டன. அந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளோட்டிக்கு காயங்கள் ஏற்பட்டன.

