பதினாறு வயதுக்குட்பட்டோருக்கு இப்போதைக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போட்டால் அவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரியவில்லை என்பதே அதற்குக் காரணம்.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு சிறார்களும் இளம் வயதினரும் பாதிக்கப்புக்குள்ளாவது குறைவு என்றும் அவர்களால் கிருமி பரவும் சாத்தியமும் குறைவு என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
"கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை 137 குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில், பூஜ்யம் வயது முதல் நான்கு வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகளிடம் 1.3% அளவுதான் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது," என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் தொற்றுநோய் சேவைப் பிரிவின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் யுங் சீ ஃபூ தெரிவித்தார்.
"இளம் பிள்ளைகளுக்கு அடிக்கடி சளி உபாதைகள் ஏற்படுவதுண்டு. ஆக அவர்கள் மழலையர் பள்ளி, பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் பயிலும்போது, சளி உபாதைகளிலிருந்து பாதுகாக்க அவர்களின் உடலில் தடுப்பு சக்தி உருவாகியிருக்கும். அதுபோன்ற தடுப்புசக்திகள் அவர்களை SARS-CoV-2 கிருமியிலிருந்து காப்பாற்றும். அதனால்தான் கொவிட்-19 கிருமி அவர்களை எளிதில் தாக்க முடியாது," என்றார் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் பால் தம்பையா.
"ஒருவேளை பிள்ளைகளுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருந்தால், காய்ச்சல், சளி, இருமல் போன்ற உபாதைகளுக்கு அதற்கேற்ற மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தலாம். இருப்பினும் அவர்களை நிமோனியா காய்ச்சல் தாக்காமல் இருக்க அவர்களைக் கண்காணிக்க வேண்டும்," என்றார் பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனையின் குழந்தைநல மருத்துவர் டாக்டர் மோகனா ராஜகுலேந்திரன்.
பள்ளிகள் மூலமாக மாணவர்களிடமிருந்து கிருமி தொற்றும் அபாயமும் மிகக் குறைவு என்று கூறும் டாக்டர் மோகனா, பள்ளிகளில் பாதுகாப்பு தூர இடைவெளி போன்ற இடர்காப்பு நிர்வாக நடைமுறைகளும் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுவதால், மாணவர்களிடையே கிருமி தொற்றும் அபாயம் மிகக் குறைவுதான் என்றார்.

