டிபிஎஸ் வங்கி, பணிமனை மின்னிலக்கப் பயிற்சிப் பயிலகம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. இந்த வங்கியில் பணிபுரியும் ஏறக்குறைய 5,000 ஊழியர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்தவும் தொழில்நுட்ப ஆற்றலைப் பெருக்கவும் இந்தப் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளது.
'டிபிஎஸ் எதிர்கால தொழில்நுட்பப் பயிலகம்' என்று அந்தப் பயிலகம் குறிப்பிடப்படும். தொடக்கமாக அது மூன்று தொழில்நுட்பத் துறைகளை உள்ளடக்கும்.
நம்பகத்தன்மை பொறியியல், கணினித் தகவல் பகுப்பாய்வுகள், செயலிகளின் பாதுகாப்பு ஆகியவை அந்த மூன்று துறைகள் என்று இந்த வங்கி நேற்று தெரிவித்தது.
அடுத்த 12 மாத காலத்தில் இதர பல முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை இதில் உள்ளடக்கி இந்தச் செயல்திட்டத்தை விரிவாக்கும் வழிகள் குறித்து இந்த வங்கி மதிப்பீடு செய்யும்.
புதிய பயிலகம் பெரும்பாலும் மெய்நிகர் பயிலகமாகச் செயல்படும். இந்தப் பயிலகம் கற்றல் முறை ஒன்றைப் பலப்படுத்தும் நோக்கத்தில் இடம்பெறுவதாக இந்த வங்கி தெரிவித்தது.
இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த வல்லுநர்களிடம் இருந்து ஆகப் புதிய தொழில்நுட்ப ஆற்றல்களைப் பெற்று அவற்றை உடனடியாக வங்கிகளின் தொழில்நுட்பத் திட்டங்களில் இடம்பெறச் செய்ய இந்தப் பயிலகம் வழிவகுக்கும் என்றும் இந்த வங்கி விளக்கியது.
இந்த வங்கியின் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட மின்னிலக்க கற்றல் தளங்களை எட்டுவதற்கு அனுமதியும் வழங்கப்படும்.
இதன்மூலம் அவர்கள் ஏற்புடைய தேர்ச்சிகளையும் அறிவையும் பெற முடியும். இவை இந்தப் புதிய பயிலகத்தில் அவர்கள் பெறும் பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
இப்போது இருக்கின்ற, புதிதாக தலைதூக்குகின்ற தொழில்நுட்ப ஆற்றல்களைக் கூடுமானவரை அதிகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய புத்தாக்க வழிகளை இந்த வங்கி இடைவிடாமல் தொடர்ந்து கண்டுவரும் என்று டிபிஎஸ் குழுமத் தலைமை தகவல் அதிகாரி ஜிம்மி இங் தெரிவித்தார்.
இந்தப் புதிய பயிலகத்தின் காரணமாக இந்த வங்கி தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிப் பாடத்திட்டங்களைக் கைக்கொள்ள முடியும்.
இதன் மூலம் நம்மை சுற்றிலும் இடம்பெறுகின்ற பெரிய மாற்றங்களைச் சமாளித்து முன்னணியில் திகழ முடியும் என்றும் அவர் விளக்கினார்.
இந்தப் பயிலகம் ஒருபுறம் இருக்க, சுமார் 200 சிங்கப்பூரர்களுக்குப் பொறுப்பாதரவு தந்து இந்த வங்கி அவர்களுக்குப் பயிற்சி அளித்தும் வருகிறது. அவர்கள் இந்த வங்கியில் இப்போது பயிற்சி பெற்று வருகிறார்கள்.
புதிய பயிலகம் போதிக்கும் தேர்ச்சி, செயல்திட்டங்கள் வழியாக அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மின்னிலக்க கற்றல் தளங்களை எட்டவும் அவர்களுக்கு அனுமதி இருக்கும்.

