குமாரி ஃபெலிசியா டியோ வெய் லிங் என்ற பெண்ணை 2007ல் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆடவர் மனநிலையை மதிப்பிடுவதற்காக மூன்று வார விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.
அகம்மது டேனியல் முகம்மது ரஃபாயி, 35, என்ற அந்த ஆடவர், சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் இருக்கும் மருத்துவ நிலையத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு மனநிலை மதிப்பிடப்படும். அது முடிந்ததும் இந்த வழக்கு ஜனவரி 28ல் மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும்.
இந்த வழக்கில் 'விதர்ஸ் கத்தார் வோங்' என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று வழக்கறிஞர்கள் அவரைத் தற்காத்து வாதாடுகிறார்கள்.
மரின் டெரஸ் அடுக்கு மாடி வீடு ஒன்றில் 2007 ஜூன் 30ஆம் தேதி குமாரி டியோவை அகம்மது கொலை செய்து இருக்கிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த சிங்கப்பூரர், ராகில் புத்ரா சித்யா சுக்மராஜனா, 32, என்பவருடன் சேர்ந்து இந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த இருவரும் குமாரி டியோவுக்கு நண்பர்கள். ராகில் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இவர் தொடர்பான புலன்விசாரணையின் மேல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
குமாரி டியோ, காணாமல் போனபோது அந்தச் செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
அந்தப் பெண் மரின் டெரசில் இருக்கும் ஒரு புளோக்கின் மின்தூக்கிக்குள் இரண்டு பேருடன் சென்றதை உள்கட்டமைப்பு கேமராக்கள் காட்டின.
அதற்குப் பிறகு அந்தப் பெண் காணப்படவே இல்லை. அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. மகளைக் காணவில்லை என்று 2007 ஜூலை 3ஆம் தேதி அந்தப் பெண்ணின் தாயார் புகார் கொடுத்தார்.
பிறகு இந்த விவகாரம் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து அகம்மது கைதானார்.