இறப்பின் விளிம்பை எட்டிப் பார்க்கும் அளவுக்கு துன்புறுத்தல்: அண்ணன், தம்பி இருவருக்கும் சிறைவாசம்

இறப்பின் விளிம்பை எட்டிப் பார்க்கும் அளவுக்கு துன்புறுத்தல்: அண்ணன், தம்பி இருவருக்கும் சிறைவாசம்

2 mins read
9fdb3ffd-4eb7-439a-a116-bff46823c808
இஸ்கிக்கு (இடது) எட்டு மாதச் சிறைத் தண்டனையும் இஸ்கந்தருக்கு இரண்டு மாத, நான்கு வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

தங்களுக்குப் பழக்கமான, மிதமான அறிவுமந்தக் குறைபாடுடைய ஒரு பெண்ணை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அக்குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அறைந்தது, குத்தியது, தடுக்கி விழச் செய்தது போன்றவற்றின் தொடர்பில் பெண்ணைக் காயப்படுத்தியதாக 32 வயது முகம்மது இஸ்கந்தர் இஸ்மாயில் ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு மாத, நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. போலிசாருக்குப் பொய்த் தகவல் அளித்த குற்றத்தையும் இஸ்கந்தர் ஒப்புக்கொண்டார். இஸ்கந்தரின் தம்பி 30 வயது முகம்மது இஸ்கி இஸ்மாயிலுக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்களின் இரண்டு சகோதரிகளும் வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

தற்போது 30 வயதாகும் அந்தப் பெண்ணுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததன் தொடர்பில் 2 குற்றச்சாட்டுகளை ஹஸ்லிண்டா இஸ்மாயில், 34, ஒப்புக்கொண்டார். மேலும் அந்தப் பெண்ணின் கால்விரல் முறியும்வரை அதை இடுக்கியால் முறுக்கியதையும் ஹஸ்லிண்டா ஒப்புக்கொண்டார்.

முறையற்ற வகையில் சிறைவைத்தது, வேண்டுமென்றே காயம் விளைவித்தது தொடர்பிலான குற்றச்சாட்டுகளை ஹஸ்னிசா இஸ்மாயில், 39, ஒப்புக்கொண்டார்.

இரண்டு சகோதரிகளுக்கும் வேறு நாளில் தண்டனை விதிக்கப்படும்.

அதே பெண்ணைத் துன்புறுத்தியதன் தொடர்பில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஹஸ்லிண்டாவின் கணவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானார் அந்தப் பெண். அவர் 2018ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதியன்று கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது இறப்பின் விளிம்பில் இருந்தார் என்று கூறப்பட்டது. அவரை மீட்க எட்டு மணி நேர அவசர சிகிச்சை தேவைப்பட்டது.

சிறுநீர் கலந்த உணவைச் சாப்பிட வைத்தது, சுடுநீர் ஊற்றியதால் பல இடங்களில் காயமடைந்தது, கழிவுத் தொட்டியுடன் கட்டி வைக்கப்பட்டது, சூடான எண்ணெய் அவர்மீது தெளிக்கப்பட்டது, சுத்தியலைக் கொண்டு அடித்ததில் அவரது மேல் இரண்டு பற்கள் உடைந்தது போன்றவை அத்துன்புறுத்தல்களில் சில.