சிங்கப்பூர் குடிமக்களைத் திருமணம் செய்துகொண்டிருக்கும் வெளிநாட்டினரைச் சமூக உதவித் திட்டங்கள் எட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு நன்மைகளும் உதவிகளும் கிடைக்க வேண்டும் என்றும் மாதர் செயலாய்வுச் சங்கம் (அவெர்) கோரிக்கை விடுத்து இருக்கிறது.
சிங்கப்பூரர்களை மணம் புரிந்து கொண்டு இருக்கும் இந்த வெளிநாட்டினர், சிங்கப்பூர் சமூகத்தின் மிக முக்கிய ஓர் அங்கம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்கள் சிங்கப்பூரில் குடும்ப உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
குடும்பத்திற்கும் ஊழியர் அணியில் சேர்ந்து பொருளியலுக்கும் பாடுபட்டு நாட்டிற்கு அவர்கள் தொண்டாற்றி வருகிறார்கள் என்று அந்த மாதர் சங்கம் குறிப்பிட்டு இருக்கிறது.
இத்தகைய வெளிநாட்டினருக்கு நிரந்தரவாச உரிமையும் குடியுரிமையும் கிடைப்பதற்குத் தெள்ளத்தெளிவான வழிகளும் கால அட்டவணையும் இருக்க வேண்டும் என்று அவெர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்று தான் விரும்பும் அம்சங்களைப் பட்டியலிட்டு மாதர் செயலாய்வுச் சங்கம் அந்தப் பட்டியலை அரசாங்கத்திடம் நேற்று தாக்கல் செய்தது.
அதில் இந்த விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
சிங்கப்பூரர்களைத் திருமணம் செய்து கொண்டு இருக்கும் வெளிநாட்டினருக்கு நன்மைகளும் சமூக உதவிகளும் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் குடும்பம் ஏழ்மைப் பிடியில் சிக்கிவிடும்.
அத்தகைய ஒரு போக்கு, குறைந்த வருமான சிங்கப்பூர் ஆடவர்களை மணம் புரிந்து இருக்கும் வெளிநாட்டுப் பெண்கள் அதிகம் என்பதால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சமத்துவமின்மை நீடிக்கக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் மாதர் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரர்களை மணம் புரிந்து இருக்கும் வெளிநாட்டினர், சுயவேலை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சங்கம் யோசனை தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரர்களைத் திருமணம் செய்து கொண்டு இருக்கும் வெளிநாட்டினர் பலருக்கும் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் உரிமை அதுவாகவே கிடைத்துவிடாது என்பது குறிப்பிடத்தக்கது.

