கணினி, கைபேசிகளில் இளையர்கள் அதிக நேரம் செலவிடுவதும் போதிய தூக்கம், உடற்பயிற்சி இல்லாதிருப்பதும் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பழக்கங்களை ஊக்குவிக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கைபேசி, மடிக்கணினிகள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் உடல் இயக்கத்தை மேற்கொள்வதற்கும் இடையே சமநிலை காண்பது குறித்த பரிந்துரைகளை இந்த வழிகாட்டுதல்கள் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் வழங்குகின்றன.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனை (கேகேஎச்) கடந்த நவம்பரில் ஐந்து முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் 100 பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வைக் கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆய்வின் வழி 43 விழுக்காட்டினர் எத்தகைய தீவிர உடல் செயல்பாடுகளையும் செய்யவில்லை என்றும் 32 விழுக்காட்டினர் எத்தகைய மிதமான செயலிலும் ஈடுபடவில்லை என்றும் தெரியவந்தது. 25 விழுக்காட்டினர் ஒரு நாளில் விழித்திருக்கும் நேரத்தில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள்.
மேலும், கணினி, கைபேசிகளில் குழந்தைகளும் அதிக நேரம் செலவிடுகின்றன. 20 விழுக்காட்டினர் பரிந்துரைக்கப்படும் நேரத்தைவிட இரண்டு மடங்காக, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாகச் செலவிடுகின்றனர்.
ஆய்வில் பங்கேற்ற பெற்றோர்களில் 70 விழுக்காட்டினர் தங்கள் பிள்ளைகள் கணினி, கைபேசிகளில் செலவிடும் நேரம் குறித்து அக்கறை கொண்டுள்ளனர் என்றும், 41 விழுக்காட்டினர் பரிந்துரைக்கப்பட்ட நேர அளவு பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு மூலம் அறியப்பட்ட இந்தத் தகவல்கள், 24 மணி நேர நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை உருவாக்க சுகாதார நிபுணர்களைத் தூண்டியது.
பிள்ளைகள் நாள் முழுவதும் பலவிதமான எளிய உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும், ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு மணி நேரம் மிதமான முதல் தீவிரமான உடல் செயல்பாட்டை மேற்கொள்ளவும் ஒரு வழிகாட்டுதல் ஊக்குவிக்கிறது.
சிறார்கள், இளவயதினரின் உடல் செயல்பாட்டை ஊக்குவிக்க 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்குத் துணையாக அமையும் புதிய பரிந்துரை, எளிய உடல் செயல்பாடுகளின் பயன், நல்ல உணவு, தூங்கும் பழக்கம் குறித்த அண்மைய ஆய்வு விவரங்களைக் கொண்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் கேகே மருத்துவமனையில் நடைபெற்ற ஆசிய பசிபிக் தாய் சேர் சுகாதார மாநாடு மற்றும் பெண்கள், குழந்தைகள் அனைத்துலகக் கூட்டம் 2021ல் வெளியிடப்பட்டது.
சுகாதார சேவை வழங்குவோருக்கு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.
பின்னர் அவர்கள் நோயாளிகளுக்குப் பொருத்தமான தேர்வுகளை வழங்கலாம்.

