கோவன் இரட்டை கொலைகள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போலிஸ் அதிகாரி இஸ்கந்தர் ரஹ்மட், தனது தற்காப்பு வழக்கறிஞர் குழு மீது தவறான நடத்தைக்காக விசாரணை மேற்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்காட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சட்டத்திற்கு எதிராக நேற்று ஐந்து நீதிபதிக் குழு இவ்வாறு முடிவெடுத்தது.
வழக்கறிஞர்களின் நடத்தை தொடர்பான புகார்களை சிங்கப்பூரின் ஆக உயரிய நீதிமன்றம்வரை மேல்முறையீட்டுக்காக கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டது.
வழக்கறிஞர் சங்கம், 2011ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை மேற்கோள் காட்டி, மேல்முறையீடு செய்ய இஸ்கந்தருக்கு உரிமை இல்லை என்றது. இருப்பினும், அம்முடிவு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதியன்று வீடு ஒன்றுக்குள் புகுந்து 67 வயது வர்த்தகர் திரு டான் பூன் சின்னை இஸ்கந்தர் பலமுறை குத்திக் கொலை செய்தார். கொலையைப் பார்த்த வர்த்தகரின் 42 வயது மகன் திரு டான் சீ ஹோங்கையும் ரஹ்மட் கொன்றார். வர்த்தகரின் காரை ஓட்டிக்கொண்டு ரஹ்மட் தப்ப முயன்றபோது அந்த மகனின் சடலம் காரின் கீழ் இழுத்துச் செல்லப்பட்டது. வழக்கு விசாரணையின்போது சட்ட உதவித் திட்டத்தின்கீழ் இஸ்கந்தரின் தற்காப்புக்காக வாதாட ஆறு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

