'செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் இந்தியப் பிரிவான 'செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியா லிமிடெட், அதன் துணை நிறுவனமான 'செம்ப்கார்ப் கிரீன் இன்ஃப்ரா' மூலம் 400 மெகாவாட் சூரிய சக்தி தயாரிப்புத் திட்டத்தைக் கையகப்படுத்தியுள்ளது.
இந்திய சூரிய சக்தி கழகம் நடத்திய ஏலத்தில் இதனை வென்றதாக எரிசக்தி பயனீட்டுக் குழுமம் நேற்று அறிவித்தது. இதன்படி, வட இந்தியாவின் ராஜஸ்தானில் சூரிய சக்தி தயாரிப்புத் திட்டத்தை இந்நிறுவனம் மேற்கொள்ளும். அம்மாநிலத்தின் பயனீட்டு வழங்கு நிறுவனமான ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் பிரசரன் நிகம் லிமிடெட் உடன் இது இணைக்கப்படும்.
திட்டத்தின் முழு தயாரிப்பும் 25 ஆண்டு நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய சூரிய சக்தி கழகத்திற்கு விற்கப்படும். 2022ஆம் ஆண்டின் மத்தியில் வர்த்தக செயல்பாட்டுக்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸின் இந்த அண்மைய திட்டத்தால், இக் குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அளவு 3,000 மெகாவாட்டிற்கும் மேலாக இருக்கும். சிங்கப்பூர், சீனா இந்தியா முழுவதும் இந்நிறுவனம் திட்ட மேம்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.