தடுப்பூசியைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி மூலம் மோசடி: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

தடுப்பூசியைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி மூலம் மோசடி: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

1 mins read
df59c488-3fe8-41ab-812d-47b477bd931c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

குறுஞ்செய்தி மூலம் கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள மக்களில் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரும் வேளையில், இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்ற மோசடிக்காரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

கொவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற்றுள்ள நிறுவனம் ஒன்றிடம் இருந்து வருவதாகக் கூறப்படும் குறுஞ்செய்திகளில், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்கு குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பை சொடுக்குமாறு அல்லது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணை அழைக்குமாறு குறிப்பிடப்படுகிறது.

இந்த மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அமைச்சு, இத்தகைய மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டு உள்ளது. தனிப்பட்ட, நிதி விவரங்களை அனுப்புவதற்கு முன் அத்தகைய குறுஞ்செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு அமைச்சு அறிவுறுத்தியது.

"இந்தக் குறுஞ்செய்திகள் சுகாதார அமைச்சிடம் இருந்து வரவில்லை. எவரையும் நேரடியாக தொடர்புகொள்ள எந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் அமைச்சு ஒப்புதல் அளிக்கவும் இல்லை. இத்தகையை குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்," என்று தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில் அமைச்சு விவரித்தது.

சிங்கப்பூர் தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தடுப்பூசிக்குப் பதிவு செய்ய தகுதி பெறுவோருக்கு குறுஞ்செய்தி மூலம் அமைச்சு தகவல் அளித்து வருகிறது.

குறுஞ்செய்திகள் குறித்து சந்தேகம் எழுந்தாலோ தடுப்பூசித் திட்டம் குறித்து கேள்விகள் இருந்தாலோ 1800-333-9999 எனும் எண்ணில் சுகாதார அமைச்சைத் தொடர்புகொள்ளலாம்.