வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் 'வடமேற்கு ஒற்றுமைக் காலடிகள்' என்ற மாவட்ட அளவிலான நிதி திரட்டும் இயக்கம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது.
வடமேற்கு வட்டாரத்தில் வசதி குறைந்தோருக்கு உதவுவது இதன் நோக்கம். குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த இயக்கத்தை வெற்றிகரமான தாக்க மன்றம் திட்டமிட்டுள்ளது.
இந்த இயக்கத்தில் கலந்துகொள்பவர்கள் மொத்தமாக 20 மில்லியன் காலடிகள் நடந்து இலக்கை எட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாம் நேற்று இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அவருடன் சேர்ந்து ஏறக்குறைய 30 பேர், எட்டு பேருக்கு மிகைப்படாத குழுக்களாக ஒவ்வொருவரும் 2,000 காலடிகள் எடுத்து 2 கி.மீ. தொலைவிற்கு நடந்தனர்.
இந்த இயக்கத்தில் நிறுவனங்களும் குடியிருப்பாளர்களும் 42Race என்ற கைபேசி செயலி மூலம் கலந்துகொள்ளலாம்.
பிப்ரவரி 28 வரை கொவிட்-19 நிபந்தனைகளுக்கு உட்பட்டு குழுக்களாக அல்லது தனியாக நடந்து சாதனை படைக்கலாம்.
42Race செயலி மூலம் தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் நிதி அளித்து உதவ முடியும்.
மின்னஞ்சல் மூலம் இந்த மேம்பாட்டு மன்றத்துடன் தொடர்புகொண்டு நன்கொடைகள் வழங்கலாம். இந்த இயக்கம் மூலம் திரட்டப்படும் நிதி வடமேற்கு வட்டாரத்தில் வசிக்கும் வசதிகுறைந்த மாணவர்கள், குடும்பங்கள், மூத்தோருக்கு உதவும்.
கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படும் நிலையில் உள்ள இத்தகைய பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
இந்த மன்றம் வசதி குறைந்தவர்களுக்குப் பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் பல ஆண்டுகளாக உதவி வருகிறது.
கொவிட்-19 பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு இந்த உதவித் திட்டத்தை இந்த மன்றம் தீவிரப்படுத்தி இருக்கிறது.
"ஒவ்வொருவரையும் ஈடு படுத்தி பயனுள்ள காரியத்தில் அவர்களை ஈடுபடுத்துவதற்கு எளிமையான ஒரு வாய்ப்பாக இந்த ஒற்றுமை காலடிகள் இயக்கம் இருக்கிறது.
"ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் ஒற்றுமையைப் புலப்படுத்தும். திரட்டப்படும் நிதி உதவி தேவைப்படுவோருக்கு கைகொடுக்கும்," என்று மேயர் தெரிவித்தார்.

