பாதுகாப்பு தூர இடைவெளி வர்த்தகங்களாலும் தனிநபர்களாலும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதில் கடைத்தொகுதிகளும் விதிவிலக்கல்ல.
சிங்கப்பூரின் மூன்றாம் கட்டத் தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதும் கூட்ட நெரிசலை எதிர்நோக்கும் கடைத்தொகுதிகளில் கூடுதல் நுழைவுக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படக்கூடும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் நேற்று தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பெனின்சுலா பிளாசா, லக்கி பிளாசா கடைத்தொகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாரயிறுதியில் அடையாள அட்டை யுடன் ஒத்திருக்கும் ஒற்றை/இரட்டை இலக்க தேதி முறையிலான நுழைவுக் கட்டுப்பாடுகள் கூட்டம் அதிகம் காணப்படும் இதர கடைத்தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படலாம்.
பெனின்சுலா பிளாசா, லக்கி பிளாசா கடைத்தொகுதிகளில் வாரயிறுதியில் மியன்மார், பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண்கள் கூடுவது வழக்கம்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் தங்கள் நண்பர்களைச் சந்தித்து, தங்கள் நாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
உதாரணத்துக்கு, வாரயிறுதி ஒற்றை/இரட்டை இலக்க தேதி முறையிலான நுழைவுக் கட்டுப்பாடுகளால் பெனின்சுலா பிளாசா கடைத்தொகுதிக்குள் கூட்ட நெரிசல் குறைவாக இருந்தாலும் கடைத்தொகுதிக்கு வெளியே கூட்ட நெரிசல் அதிகரித்தே காணப்படுகிறது என்று பெனின்சுலா பிளாசா கடைத்தொகுதியின் நிர்வாகம் தெரிவித்தது.

