உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுக்கோளாறு; உரிமம் ரத்து

2 mins read
684d1769-95fa-4c3a-985a-6d9d16061094
-

நார்த்பாயிண்ட் எங்ஸ் ஹெரிட்டேஜ் உணவகத்தில் உணவு உண்டவர்கள் வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்டதால் அந்த உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 7ஆம் தேதிக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கு உணவு சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு முகமையும் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

தற்போதைய நிலையில், ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அறிக்கை விளக்கியது. இதில் மேலும் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலை சீராக இருப்பதாக அறிக்கை தெளிவுபடுத்தியது.

'வான்டான் நூடல்ஸ்' தியோச்சியூ உணவு வகைகளில் எங்ஸ் ஹெரிட்டேஜ் உணவகம் பிரச்சித்தி பெற்று விளங்குவதாகக் கூறப்படுகிறது.

நச்சு உணவு மூலம் ஏற்படும் வயிற்றுக் கோளாறால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றால் ஒருவர் அவதிப்பட நேரும். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் அடிப்படை உணவு சுகாதார பயிற்சித் திட்டத்தில் மீண்டும் கலந்துகொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு முகமையும் தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

அவர்கள் மீண்டும் அந்த உணவகத்தில் வேலை செய்யும் முன்பாக இந்தப் பயிற்சித் திட்டத்தில் அவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்ஸ் ஹெரிட்டேஜ் உணவகம் தனது உணவகத்தையும் அங்கு உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களையும் கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உணவு வகைகளை கையாள்வோர் எல்லா நேரங்களிலும் உணவு, தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு முகமை வலியுறுத்தியுள்ளது.

இந்த விதிமுறையை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகமை எச்சரித்துள்ளது.