தாயைத் தாக்கிய மகனுக்கு 63 மாதச் சிறை

தாயைத் தாக்கிய மகனுக்கு 63 மாதச் சிறை

2 mins read
ca0ca7d8-2633-4aec-8dad-379e8687a90b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆடவர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான ரகசிய எண்ணை தெரிவிக்கவில்லை என்பதற்காக திருவாட்டி யூனிஸ் சாங் சியூ ஜியோக் என்ற தனது தாயாரை அவருடைய ஊன்றுகோலால் அடித்தார்.

ரகசிய எண்ணைத் தரவில்லை என்றால் கத்தியை எடுத்து எல்லா விரல்களையும் வெட்டி விடுவேன் என்று கூட அந்த 77 வயது முதிய மாதை அந்த ஆடவர் மிரட்டினார்.

மகன் அடித்த அடி தாங்கமுடியாமல் அடுத்த நாள் படுக்கையைவிட்டு அந்த தாயாரால் எழ முடியவில்லை. தரையில் ஊர்ந்துகொண்டுதான் அவரால் நகர முடிந்தது. பெற்ற தாயையே தாக்கிய ஏட்ரியன் யாப் யின் லியூங், 56, என்ற அந்த ஆடவருக்கு ஐந்து ஆண்டு மூன்று மாதங்கள் (63 மாதங்கள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வேண்டுமென்றே தன் தாயாருக்குக் காயம் விளைவித்து அவரிடம் கொள்ளையடித்தது, புலன்விசாரணைக்காக போலிசிடம் முன்னிலையாகத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

போலி சிங்கப்பூர் பாஸ்போர்ட் ஒன்றை வைத்திருந்ததாகக் கூறும் மற்றொரு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாப்புக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை, அவர் முதன்முதலாக விசாரணைக் காவலில் வைக்கப்பட்ட 2019 அக்டோபர் 31ஆம் தேதி முதல் தொடங்கும்.

யாப், 2018 அக்டோபர் 16ஆம் தேதி தன் தாயாரின் ஏடிஎம் கணக்கில் இருந்து தனக்குப் பணம் வேண்டும் என்று சொல்லி ரகசிய எண்ணை கேட்டார்.

அந்த மாது மறுத்துவிட்டார். அதனால் கோபமடைந்த யாப், ஊன்றுகோலைப் பிடுங்கி மாதை தாக்கினார். அவரை எட்டி உதைத்தார், ஏறி மிதித்தார், முடியை பிடித்து இழுத்தார், கத்தியை எடுத்து எல்லா விரலையும் வெட்டிவிடுவேன் என்று மிரட்டினார். பயந்துபோன அந்தத் தாயார் ரகசிய எண்ணைக் கொடுத்துவிட்டார். போலிசை கூட அழைக்க தெம்பு இல்லாமல் அந்தத் தாயார் படுக்கைக்குச் சென்றுவிட்டார். தாயாரின் கணக்கில் இருந்து யாப் $2,000 எடுத்துக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில் படுக்கையைவிட்டு அந்தத் தாயாரால் எழ முடியவில்லை. எப்படியோ ஊர்ந்து தரையில் நகர்ந்து வந்து பக்கத்து வீட்டுக்காரரை உதவிக்கு அழைத்தார். போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதிய மாது 36 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.