கடந்த ஆண்டு ஜிசிஇ 'ஓ' நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூன்று சிறை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 53 கைதி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றனர்.
உள்துறை, தேசிய வளர்ச்சிக்கான துணையமைச்சர் பைசல் இப்ராஹிம் தானா மேரா கல்விக் கழகத்தில் உள்ள சில சிறைக்கைதிகளை நேற்று சந்தித்தார்.
இந்த விகிதம் 2019, 2018 ஆண்டுகளுடன் ஒப்பிடத்தக்கது என்ற அவர், கொவிட்-19 மற்றும் அவர்கள் சந்தித்த சிரமங்கள் இருந்தபோதிலும் அவர்கள் இந்தத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது என்றார் அவர்.
2019ஆம் ஆண்டில், 87 கைதிகள் 'ஓ' நிலைத் தேர்வு எழுதினர். 2018 இல் 95 பேர் தேர்வு எழுதினர்.
சிறைப் பள்ளியில், 'ஓ' நிலை மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் கணக்கியல் ஆகிய பாடங்களை முக்கிய பாடங்களாகக் கொண்டு ஐந்து பாடங்களைப் படிக்கின்றனர்.
ஒருங்கிணைந்த அறிவியல் (இயற்பியல், உயிரியல்) அல்லது வணிகப் படிப்பு மற்றும் வேறு ஒரு பாடத்தை அவர்கள் தேர்வு செய்யலாம்.
தாய்மொழி, கூடுதல் கணிதம் அல்லது மானுடவியல் பாடங்களில் ஒன்றை இணைப் பாடமாக தேர்வு செய்யலாம்.
சிங்கப்பூர் முழுவதும், கடந்த ஆண்டு 'ஓ' நிலைத் தேர்வை எழுதிய 96.8 விழுக்காடு மாணவர்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றனர்.