சிங்கப்பூரில் புதன்கிழமை உள்ளூரில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்த ஒர்க்பர்மிட் ஊழியர். அவர் டிசம்பர் 11ஆம் தேதி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தார்.
அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் டிசம்பர் 25 வரை தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு டிசம்பர் 21 மற்றும் 27ஆம் தேதிகளில் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தொற்று இல்லை என்று அவை காட்டின. இருந்தாலும் வழக்கமாக நடத்தப்படும் சோதனைகளையொட்டி ஜனவரி 12ஆம் தேதி அவருக்குத் தொற்று இருப்பது தெரிந்தது.
அவர் இங்கு வந்த நாளுக்கும் கொவிட்-19 இருப்பதாக தெரியவந்த நாளுக்கும் இடையில் அதிக இடைவெளி இருப்பதால் இந்த விவகாரத்தை உள்ளூர் கிருமித்தொற்று சம்பவமாக அமைச்சு வகைப்படுத்தியது.
இப்போது துவாசில் இருக்கும் 'சீடவுன் டார்மிட்டரி' என்ற விடுதியில் தங்கி இருக்கும் அவர், ஜனவரி 6ஆம் தேதி கட்டுமானத் துறை பணியைத் தொடங்கினார்.
அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். தனிமைக் காலம் தொடங்கும் போதும் முடியும்போதும் இவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்படும்.

