தொடர்ந்து பல வாரங்களாக சிங்கப்பூரில் கனமழை பெய்து வந்தது. சாலைகளில் குழிகள் அதிகமாகத் தோன்றத் தொடங்கின.
இதனால் வாகனமோட்டிகளும் சைக்கிளோட்டிகளும் அக்கறை தெரிவித்து வருகின்றனர்.
இதைப் பற்றி தாம் அறிந்திருப்பதாக போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் கூறினார்.
"முன்பைவிட இவ்வாண்டு மழை அதிகமாக பெய்தது. அத்துடன் வெகுநேரம் நீடித்தது. இதனால் வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமான குழிகளைச் சாலைகளில் காண முடிகிறது," என்றார் அவர்.
தொடர்மழையால் நிலத்தடிக்குள் நீர் ஊடுருவிச் சென்று மண்ணை மென்மையாக்கிவிடுகிறது. மேல் உள்ள 'டார்மாக்', வாகனங்கள் செல்லும்போது சரிந்துவிடுகிறது என்று அவர் விளக்கினார்.
குழிகள் உள்ள சாலைகளை அடையாளம் கண்டு, உடனடியாகச் சீர் செய்யும் பணிகளில் நிலப் போக்குவரத்து ஆணையம் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கொள்ளை நோய் காரணமாக சீர் செய்வதற்கான ஊழியர்களைக் கொண்டு வருவதில் நிறுவனங்கள் சிரமப்படுவதையும் அவர் சுட்டினார்.
சாலைக் கட்டமைப்பு மிகப் பெரிது என்பதால், குழிகளைச் சாலைப் பயனாளர்கள் பார்க்க நேரிட்டால் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
'ஒன்செர்விஸ்' மற்றும் 'மைடிரான்ஸ்போர்ட்' செயலிகள் வழி மக்கள் இதைப்பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம்.

