சிங்கப்பூர் துறைமுகத்தில் கப்பல் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பணியாளர்கள், கப்பலை விட்டு வெளியேறும் பணியாளர்கள் ஆகியோர், 'SafeEntry@Sea' முறையில் தங்களின் வருகையைப் பதிவு செய்வது இன்று நடப்புக்கு வந்தது.
கப்பல் துறைமுகம், படகுத் துறைமுகம், முனையம், மெரினா போன்ற புறப்படுவதற்கான அனைத்து மையங்களும் நீர்முகப்பு வசதிகளும் இப்புதிய கட்டப்பாட்டுக்கு உட்பட்டவை.
தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம், பயணம் செய்யவிருக்கும் கப்பல் ஆகியவற்றின் விவரங்களைப் பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் கப்பலில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளவேண்டும் என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
தொடர்புகளின் தடமறிவதற்காக தேசிய அளவிலான மின்னிலக்க வருகைப் பதிவுமுறையே 'சேஃப்எண்ட்ரி'. இத்திட்டம் கடல்துறைப் பிரிவுக்கும் இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் கிருமி பரிசோதனை செய்து கொள்ளும் பணியாளர்கள், தங்களுக்குத் தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவைக் காட்ட வேண்டும். மேலும், கப்பல் பயணத்திற்கு முந்தைய ஏழு நாட்களில் அப்பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

