இந்தோனீசியாவின் ஸ்ரீவிஜயா விமான விபத்து குறித்த விசாரணையில் உதவ, சிங்கப்பூரின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த இருவர் ஜகார்த்தா சென்றுள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூரின் உதவியை இந்தோனீசிய தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழு ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவரும் புதன்கிழமை ஜகார்த்தா சென்றனர்.
இம்மாதம் 9ஆம் தேதி, எஸ்ஜே182 என்ற அந்த விமானம் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 62 பேரும் மாண்டனர்.
இந்தோனீசிய கடற்படை முக்குளிப்பாளர்கள் கண்டுபிடித்த இந்த போயிங் 737-500 விமானத்தின் தரவுப் பதிவை பல நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூர் புலனாய்வாளர்களில் ஒருவரான திரு அலெக்சாண்டர் லியோங் விமானப் பதிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் மீட்கப்பட்ட தரவுகளைப் பார்க்க இந்தோனீசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி குங் தமது ஃபேஸ்புக் பதிவில் நேற்றுக் கூறினார்.
மற்றவர், திரு டேவிட் லிம், உரிமம் பெற்ற விமான பராமரிப்பு பொறியாளரான இவர் ஜகார்த்தாவில் உள்ள தஞ்சோங் பிரியோக் துறைமுகத்தில் இருக்கிறார். அங்கு மீட்கப்பட்ட சிதைவுகளை ஆராயும் குழுவுக்கு இவர் உதவுவார்.