சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், ஒரு நாளில் 4,000 பேர் வரை கொரோனா தடுப்பூசி போட முடியும்.
"எங்களுக்கு 27 தடுப்பூசி சாவடிகள் உள்ளன. அதனால், ஒரு மணிநேரத்தில் 12 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டால், நாங்கள் 14 மணி நேரத்திற்குப் பணிபுரிந்து நாள் ஒன்றுக்கு 4,000 அல்லது அதற்கு மேலும் தடுப்பூசி போட முடியும் என்ற நம்பிக்கை உண்டு," என்றார் இந்தத் தடுப்பூசி மையத்தின் முதன்மை மருத்துவ நிபுணர் டாக்டர் டான் ஜூ பெங்.
தடுப்பூசி மையத்தை அமைக்குமாறு ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமத்திற்கு அழைப்பு வந்தபோது, செயல்பாடுகளில் இறங்க ஐந்தே நாட்கள்தான் எடுத்தது.
சென்ற வாரம் நடந்த முன்னோட்டக் கட்டத்தில் 1,000க்கு மேற்பட்ட விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதையடுத்து முழுவீச்சில் விமான, கடல்துறைகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.
இவ்வாரத்தில் சுமார் 7,000 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் டாக்டர் டான். ஒருவருக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அவருக்கு ஒரு மணி நேரத்தை மட்டுமே ஒதுக்குவது இலக்கு என்றார் அவர்.
தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்கு 30 நிமிடக் கண்காணிப்பும் ஒரு மணி நேரத்தில் அடங்கும். 10,000 தடுப்பூசி அளவுகளை வைப்பதற்கான மருத்துவக் குளிர்சாதனப் பெட்டி ஒன்றும் இதற்கெனக் கொண்டுவரப்பட்டுள்ளது.

