கவனக்குறைவால் புற்றுநோயாளியான திருவாட்டி நூர் அஸ்லின் அப்துல் ரஹ்மானின் மரணத்துக்குக் காரணமான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாண்ட அந்த நோயாளியின் குடும்பத்துக்கு $326,620 தொகையும் அதனுடன் 5.33% வட்டி, $105,000 வழக்குக்கான தொகை ஆகியவற்றை இழப்பீடாக சாங்கி பொது மருத்துவமனை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோயறிதலைத் தெரிவிக்க கால தாமதம் ஆனதால், அவருக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டு, மோசமான உடல்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதன் தொடர்பில் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். அது மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சென்றது.
நூர் அஸ்லினுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஐந்து வாரங்களுக்குப் பின் 2019ஆம் ஆண்டில் அவர் தமது 39வது வயதில் மாண்டார்.
அவரது குடும்பத்தினர் மருத்துவமனை $13.46 மில்லியன் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர். ஆனால், மருத்துவமனை $20,800தான் கொடுக்க முடியும் என்று எதிர்வாதம் செய்தது.
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் நூர் அஸ்லினின் புற்றுநோய் அவரது மூளைக்குப் பரவிவிட்டது.
உயர் நீதிமன்றம் நேற்று இழப்பீடு பற்றி தனது தீர்ப்பை அளிப்பதற்கு முன் நூர் அஸ்லினின் குடும்பத்துக்கு 2019 செப்டம்பரில் $200,000 தொகை இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தடுக்க அம்மருத்துவ மனை கடந்த ஆண்டு மூன்று முறை முயன்று தோல்வி கண்டது.
திருவாட்டி நூர் அஸ்லிம் மரணமடை வதற்கு முன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில், "மற்றவர்களுக்கு இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்பதற்காகத்தான் நான் சாங்கி பொது மருத்துவமனை மீது வழக்கு தொடுத்தேன்," என்றார்.

