அறிவியல், தொழில்நுட்பமும் உலக ஒத்துழைப்பும் கொவிட்-19 கிருமித்தொற்றைத் துடைத்தொழிப்பதில் மிக முக்கியமானவை என்பதை அந்தக் கிருமி வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து இருக்கிறார்.
அந்த அம்சங்களும் வலுவான சமூகச் செயல்பாடுகளும் சமூகங்கள் அதிக மீள்திறனுடன் திகழ உதவும் என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்றையும் இதர சவால்களையும் திறம்பட சமாளிக்க வழி வகுக்கும் என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.
"கொவிட்-19 தொற்றையும் எதிர்காலத்தில் தலையெடுக்கக்கூடிய அடுத்த தொற்றையும் சமாளித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கான அனுகூலத்தை அறிவியலும் தொழில்நுட்பமும் எல்லா நாடுகளுக்கும் வழங்கும்.
"பொருளியல் இறங்குமுகமாக இருந்தாலும் ஆய்வு உருவாக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்பதே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்," என்று திரு ஹெங் தெமாசெக் அறநிறுவனம் ஏற்பாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
"உயிரியல் மருத்துவ அறிவியல் துறையிலும் தொற்றுநோய் தடுப்புத் துறையிலும் சிங்கப்பூர் கொண்டுள்ள ஆற்றலின் காரணமாக கொவிட்-19ஐ சமாளிப்பதில் நமக்கு ஆதரவு கிடைத்து இருக்கிறது.
"அதோடு மட்டுமின்றி கொவிட்-19க்கு எதிரான உலகப் போராட்டத்துக்குத் தோள் கொடுக்கவும் சிங்கப்பூரால் முடிந்துள்ளது," என்பதை துணைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்திற்கான திட்டங்களை உலக சமூகம் வகுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று தெரிவித்த அவர், மனித இயந்திரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
வெளியே அறிகுறி தெரியாமல் கொவிட்-19 கிருமி பரவியதன் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து நோய்களைக் கண்டறியக்கூடிய பரிசோதனைகளை மிக விரைவாக உருவாக்க முடியும்.
அதேவேளையில், அடிப்படை ஆய்வுகளைத் தொடர்ந்து நிலைநாட்டி வருவதும் நமது ஆய்வு அறநிறுவனங்களை விரிவுபடுத்த வேண்டியதும் அந்த அளவுக்கு முக்கியம் என்று பொருளியல் கொள்கைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் கூறினார். பலதரப்பு கோவெக்ஸ் தடுப்பு மருந்து உருவாக்கம் போன்ற உலகப் பங்காளித்துவ உறவு பலமடைவதும் மற்றொரு ஊக்கமூட்டும் நிலவரம் என்றார் அவர்.
ஒரு பொதுவான நோக்கத்திற்காக நாம் ஐக்கியமாகச் செயல்படும்போது இத்தகைய உலக ஒத்துழைப்பு சாத்தியமாகும் என்று தெரிவித்த அவர், இத்தகைய பங்காளித்துவ உறவை ஊக்கமூட்டி பேணி மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.
"கொவிட்-19 கிருமி பல சமூகங்களின் ஒற்றுமையைப் பரிசோதித்துப் பார்த்து இருக்கிறது. சில சமூகங்களில் பிளவுகளை ஆழப்படுத்திவிட்டது," என்றும் திரு ஹெங் கூறினார்.
சிங்கப்பூரர்கள் பாதகமான சூழலிலும் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் பலப்படுத்தி இருக்கிறார்கள் என்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக திரு ஹெங் குறிப்பிட்டார்.

