நார்வேயில் முதியோர் மரணங்கள்: தடுப்பூசி காரணம் அல்ல

நார்வே நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களில் பலர் மரணம் அடைந்துவிட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் போட்டுக்கொண்ட கொவிட்-19 தடுப்பூசி காரணம் அல்ல என்று  மருத்துவத் துறை  வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

முதியவர்களைப்  பொறுத்தவரை,  தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நன்மைகளே அதிகம் என்று அவர்கள் கூறினர்.

நார்வேயில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பலர் மரணம் அடைந்ததற்கும் தடுப்பூசிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று நார்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த ஊசி மட்டுமே சிங்கப்பூரில் அங்கீரிக்கப்பட்டுள்ளது. நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்குப் பிறகு, 75 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள மொத்தம் 33 பேர் மரணம் அடைந்தனர். 

ஆனால் ஊசி போட்டுக்கொண்டதற்கு முன்பே அவர்கள் கடுமையான நோயாளிகள் என்று தெரிவிக்கப்பட்டது. 

இது பற்றி கருத்து தெரிவித்த மவுண்ட் எலிசபெத் நொவினா மருத்துவமனையின் தொற்றுநோய் வல்லுநர் டாக்டர் லியோங் ஹோ நாம், நார்வே மரணங்கள் தனிப்பட்டவை என்றார்.

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதிகம். ஆனாலும் அங்கு மரணங்கள் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

தடுப்பூசி போடுவதற்கு முன் ஒருவரை மதிப்பிட்டு ஊசி போட அவர் பொருத்தமானவர்தானா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமான ஒன்று என்றாரவர். 

தொற்றுநோய் வல்லுநர் டாக்டர் லியோங், கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு  எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்.

சிங்கப்பூரில் மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி, சில வகை உணவு போன்றவை ஒத்துக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் ஆலோசனை கூறி இருக்கிறார்கள். 

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்  கழகத்தின் சா சுவீ ஹோக் பொது சுகாதாரக் கல்வித் துறையைச் சேர்ந்த தொற்றுநோய் வல்லுநரான இணைப் பேராசிரியர் ஸு லி யாங், முதியோரிடையே மரணங்களும் அதிக நோய்களும் ஏற்படுவது அதிகம் என்பதால், நார்வே சம்பவங்களைப்  பொறுத்தவரை முதியவர்களின் மரணங்களுக்கு ஊசி மருந்து நேரடி காரணமாக இருக்க முடியாது என்றார். 

முதியோரைப் பார்க்கையில், கொவிட்-19 தடுப்பூசியால் ஏற்படக்கூடிய வேண்டாத விளைவுகளைவிட அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் அதிகம் என்று பேட்டி கண்ட மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon