தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெடிப்பு, தீ காரணமாக ஊழியர் உயிரிழந்த சம்பவம்: மறுசுழற்சி நிறுவனத்திற்கு $250,000 அபராதம்

1 mins read
c974eaf6-43ff-4aa1-8dfa-98c6ce7573c3
2017 ஜூன் 24ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். படம்: SINGAPORE CIVIL DEFENCE FORCE/FACEBOOK -

துவாஸ் பகுதியில் 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ, வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மறுசுழற்சி நிறுவனத்துக்கு $250,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2017 ஜூன் 24ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

சீன நாட்டவரான சென் சியூ எனும் அந்த 39 வயது ஊழியர் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.

சக ஊழியரும் சீன நாட்டவருமான 27 வயது ஜியாங் யோங்டெங்கிற்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவத்தில் அவர் உயிர் பிழைத்தார்.

தனது ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்யத் தவறியதாக சுவான் எங் லியோங் டிரேடிங் எனும் அந்நிறுவனம் மீதான குற்றம் கடந்த ஆண்டு நிரூபணமானது.

முழுமையான பாதுகாப்புப் பரிசோதனைகளையும் அபாய மதிப்பீடுகளையும் செய்ய அந்நிறுவனம் தவறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வாசனை திரவிய தகரக் கலன்களை நசுக்கும் இயந்திரத்தை அந்த ஊழியர்கள் இயக்கத் தொடங்குவதற்கு முன்பு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நிறுவனம் நடைமுறைப்படுத்தவில்லை.

"காலியாக இருந்தாலும் தகரக் கலங்களை நசுக்கவோ எரிக்கவோ வேண்டாம்" என தகரக் கலன்களில் குறிப்பிடப்பட்டிருந்த எழுத்துபூர்வ எச்சரிக்கையையும் அந்நிறுவனம் புறக்கணித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தகரக் கலங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்பு துவாஸ் அவென்யூ 10ல் தாய் ஹிங் மெட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை வளாகத்தில் அவ்விரு ஊழியர்களும் பணியாற்றிக்கொண்டு இருந்தனர்.