(முரசொலி)
கொவிட்-19 என்ற முன்பின் தெரியாத ஒரு கிருமி கடந்த ஓராண்டு காலமாக உலகத்தையே புரட்டிப் போட்டதோடு மட்டுமின்றி எதிர்காலம் எப்படி இருக்கும், வழக்கமான நிலை திரும்புமா; திரும்பினாலும் அது எப்படி இருக்கும் என்பதை எல்லாம் கணிக்க முடியாத சூழ்நிலையையும் ஏற்படுத்தி இன்னமும் மிரட்டுகிறது.
அந்தக் கிருமி பரவுவதைத் தடுக்க வழி தெரி யாமல் உலகம் விழி பிதுங்கி நின்ற நிலையில், ஒரு வழியாக தடுப்பூசி மருந்தை உருவாக்குவதில் வெற்றி கிடைத்து, அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் சேர்ந்து பைசர்-பயோஎன்டெக் என்ற மருந்தை உருவாக்கி உலகிற்கு விநியோகித்து வருகின்றன.
அதேபோல் மொடர்னா என்ற தடுப்பூசியும் பல நாடுகளையும் எட்டி வருகிறது. சில நாடுகள் உள்ளூர் தயாரிப்பைச் சார்ந்து இருக்கின்றன. சிங்கப்பூர் உட்பட பல நாடுகளும் ஊசிமருந்து இயக்கத்தை தொடங்கி இருக்கின்றன. சிங்கப்பூரிலும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை.
முதலில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் போன்றவர்களுக்குத் தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு எதிரான நோய்த் தடுப்பு ஆற்றலை ஏற்படுத்த பல நாடுகளில் முயற்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
போதிய அளவுக்குத் தடுப்பூசி கிடைக்காத நிலையில் உலக நாடுகளிடையே போட்டாபோட்டி நிலவுகிறது. அந்த ஊசி உலகின் எல்லா பகுதிகளையும் சென்று சேர காலம் பிடிக்கும் என்றாலும் கொவிட்-19 கிருமியை ஒடுக்க தடுப்பூசிதான் கண்கண்ட வழியாக இருக்கிறது என்றும் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் இப்போதைக்கு தனக்குக் கிடைத்துள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என்றும் உலகம் நம்புகிறது.
இத்தகைய ஒரு நிலையில், இணைய உரையாடல் குழுக்களிலும் சமூக ஊடகங்களிலும் சிலர் தடுப்பூசிக்கு எதிராக பீதியைக் கிளப்பிவிடும் தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். உறுதிப்படுத்தப்படாத, ஆதாரமில்லாத, தவறான வழிகாட்டக்கூடிய அத்தகைய செய்திகள் தடுப்பூசி ஆபத்தானது என்றெல்லாம் புரளியைக் கிளப்பி விடுகின்றன.
அந்தத் தகவல்கள் எல்லாம் தடுப்பூசி தேவைதானா என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன. பயத்தையும் கிளப்பி விடுகின்றன. தடுப்பூசியைக் போட்டுக்கொண்ட மருத்துவர்கள், இதர பராமரிப்பு ஊழியர்கள் பொதுமக்கள் மாண்டுவிட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடக் காரியங்களைச் செய்ய முடியவில்லை; வேலை பார்க்க முடியவில்லை என்றும் சிலர் புரளியைக் கிளப்பி விடுகிறார்கள். கொவிட்-19 ஊசியைப் போட்டுக்கொண்ட 200க்கும் அதிக இஸ்ரேலியர்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றிவிட்டதாகவும் ஒரு செய்தி கூறுகிறது.
இப்படி தடுப்பூசிக்கு எதிரான உறுதிப்படுத்தப்படாத, உண்மை அல்லாத தகவல்கள் ஏன் வலம் வருகின்றன என்பது சரியாகத் தெரியவில்லை.
அச்சம் காரணமா, அறியாமை காரணமா, அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா என்பது புரியவில்லை. ஆனால் சமூகத்தில் இவை ஏதோ ஒரு வகையில் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் இத்தகைய செய்திகள் பக்கம் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்கள்.
நாடுகளில் இடம்பெறும் தேசிய தடுப்பூசி இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள அவர்கள் தயங்குகிறார்கள். கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் ஒரே நாளில் தயாரிக்கப்பட்டவை அல்ல. பல மாத ஆய்வுகளுக்கு, பரிசோதனைகளுக்குப் பிறகு அவை உருவாக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி கொவிட்-19 கிருமிக்கு எதிரான முழு அரண் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் கிருமி பரவுவதையும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய மரணங்களையும் தடுக்கும் ஆற்றல் அதனிடம் இருக்கிறது என்பது அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டு உள்ளது.
உலகம் பல நோய்களுக்கு மருந்துகளையும் தடுப்பூசிகளையும கண்டுபிடித்து உருவாக்கி வந்துள்ளது. எல்லாமே சிலருக்கு ஓரளவுக்குச் சில வகை வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அரிது என்றாலும் சில மருந்துகள் சிலருக்கு மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.
இதை எல்லாம் கருத்தில்கொண்டுதான் மருத்துவத் துறையினர், நிர்வாகத் துறையினர் கொரோனா தடுப்பூசி சில பிரிவினருக்கு இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
எல்லா தடுப்பூசிகளையும் போலவே கொரோனா ஊசிமருந்தும் சில வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு மாற்று ஏற்பாடுகளையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தயாராக வைத்திருக்கிறார்கள். இதைக் கருத்தில்கொண்டுதான் அரசாங்கங்கள் தங்கள் தடுப்பூசித் திட்டங்களைத் தீட்டி இருக்கின்றன.
நார்வே நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களில் 33 பேர் மாண்டுவிட்டனர். ஆனால் அதற்கும் ஊசிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றும் அந்த முதியவர்கள் ஏற்கெனவே முற்றிய நோயாளிகள் என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெளிவுபடுத்தி மெய்ப்பித்துள்ளது.
சிங்கப்பூரிலும் இதர நாடுகளிலும் தடுப்பூசி மக்களுக்குக் கட்டாயமானதல்ல. இந்த நிலையில் தடுப்பூசி பற்றி பீதியைக் கிளப்பும் செய்திகள், ஊசி போட்டுக்கொள்ளலாமா வேண்டாமா என்று மக்கள் எடுக்கும் முடிவில் பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.
தடுப்பூசியைவிட கொவிட்-19 கிருமிதான் நோயாளிகளுக்கும் சமூகத்துக்கும் பெரிய மிரட்டல் என்பதே உண்மை. இதை மக்கள் உணர வேண்டும்.
தடுப்பூசிக்கு எதிரான பீதியைக் கிளப்பும் போலி செய்திகளைப் புறம் தள்ளிவிட்டு தங்களுக்கும் சமூகத்துக்கும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள என்ன வழி என்பதைச் சுயமாக சிந்தித்து மக்கள் முடிவு செய்யவேண்டும்.
இப்போதைக்கு தடுப்பூசியை ஆதரித்து தேசிய தடுப்பூசித் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதுதான் சிறந்த, உகந்த, பொருத்தமான, அவசியமான வழியாகத் தெரிகிறது. இதை சிங்கப்பூரர்கள் உணர வேண்டும்.

