அடைமழை மாதமான ஜனவரி: 1893க்குப் பின் அதிக மழை

அடைமழை மாதமான ஜனவரி: 1893க்குப் பின் அதிக மழை

2 mins read
537946a7-085b-42e5-9807-20745e9cc792
-

சிங்கப்பூரில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் அடைமழை பெய்து இருக்கிறது. 1893க்குப் பிறகு ஆக அதிக மழையைப் பெற்றுள்ள இரண்டாவது மாதம் 2021 ஜனவரி தான் என்பது தெரியவந்துள்ளது.

இம்மாதம் 20ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 648.4 மில்லி மீட்டர் மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 1918ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முழுவதற்கும் 634.5 மி.மீ. மழை பெய்ததாக பழைய பதிவேடுகள் மூலம் தெரியவருகிறது. இதை 2021 ஜனவரி அதற்குள்ளாகவே முந்திவிட்டது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையத்தின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் 1893 ஜனவரியில் தான் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு ஆக அதிகமாக 818.6 மி.மீ. மழை பெய்ததாக பதிவாகி இருக்கிறது. பருவமழை தீவிரமடைந்ததே இந்த மாதம் அதிக மழை பெய்ததற்கு காரணம் என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.

சிங்கப்பூரில் இப்போது வடகிழக்குப் பருவமழை காலம் நிலவுகிறது. இந்தக் காலகட்டத்தில் திடீரென பருவமழை அதிகரிப்பதுண்டு. வலுவான காற்று காரணமாக தென் சீனக் கடலின் வட பகுதியில் உள்ள வட்டாரங்களில் இருந்து குளுமையான காற்று இப்பகுதிக்குப் பரவும். இதனால் பருவநிலையில் ஈரப்பதம் கூடி, அடர்த்தியான மழை மேகம் திரளும்.

இதன் காரணமாக சிங்கப்பூரிலும் பக்கத்து நாடுகளிலும் மழை பெய்யும் என்று ஆய்வு நிலையம் முன்னதாக விளக்கியது.

இதனிடையே, பருவநிலை மாற்றத்துக்கும் இம்மாதம் அதிக மழை பெய்ததற்கும் தொடர்பு இருக்க முடியுமா என்று கேட்டதற்கு விளக்கம் அளித்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவில் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் வின்ஸ்டன் சோவ், இதற்குப் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்டார். மனிதர்கள் செய்யும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பூமி வெப்பம் கூடுகிறது. குளிர் காற்றைவிட வெப்பமான காற்றில் அதிக நீராவிகள் இருக்கும். வெப்ப மடையும் 1 டிகிரி செல்சியசுக்கும் காற்றில் சுமார் 7 விழுக்காடு அதிக நீராவி இருக்கும். அது சுருங்கி குளிர் காற்றைவிட அதிக வேகத்தில் தண்ணீராக மாறும். சரியான சூழலில் இது பருவமழையை அதிகப்படுத்தும் என்று கோட்பாட்டு அடிப்படையில் கூறப்படுகிறது. இருந்தாலும் சிங்கப்பூரில் பருவமழைக்கு இதர பல காரணங்களும் இருக்கின்றன என்று பேராசிரியர் சோவ் விளக்கினார்.

தரைக்கும் கடலுக்கும் இடையில் காணப்படும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக பருவமழைக்கால காற்று வேகமடையும். அதிக காற்று, காற்றுத் தூய்மைக்கேடு, மேகம் ஆகியவையும் பருவ மழைக்கால வெப்பநிலை மாறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாதம் சாதனை அளவு மழை பெய்ததற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றமாக இருக்காது என்று தெரிவித்த பேராசிரியர் சோவ், இங்கு மழை நிலவரம் மாறுபடுவதற்கு வெப்பநிலையைக் காட்டிலும் சிக்கலான பல காரணங்கள் இருப்பதாகவும் கூறினார். சிங்கப்பூரில் பருவநிலை அறிவியல் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த பல முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.