சிங்கப்பூர் உற்பத்தித் துறையை 50% வளர்ப்பதற்கும் நாட்டின் பொருளியலில் அதன் பங்கு கிட்டத்தட்ட 20 விழுக்காடாக இருப்பதைத் தொடரச் செய்யவும் புதிய பத்தாண்டு திட்டத்தை வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் அறிவித்து இருக்கிறார்.
அனைத்துலக அளவில் சிங்கப்பூர் உற்பத்தித் துறையைப் போட்டித்தன்மைமிக்கதாக அத்திட்டம் மேம்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.
அப்படி உற்பத்தித் துறை வளரும்போது, அதிகமான சிங்கப்பூரர்கள் அத்துறையில் பணியாற்ற வேண்டியிருக்கும் என்றும் குறைந்த ஊதிய வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் திரு சான் சொன்னார்.
நாட்டின் பொருளியலில் உற்பத்தித் துறையின் பங்கு ஏறக்குறைய 21 விழுக்காடாக, அதாவது கிட்டத்தட்ட $106 பில்லியனாக இருக்கிறது. அத்துறையில் 450,000 பேர் வேலை செய்கின்றனர். அதாவது, சிங்கப்பூர் ஊழியரணியில் 12 விழுக்காட்டினர் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை தொடர்ந்து ஆறு மாதகாலம் உற்பத்தித் துறை வளர்ச்சி கண்டது. இவ்வாண்டிலும் நாட்டின் பொருளியல் வளர்ச்சியில் அத்துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
'யூனிவேக்' நிறுவனத்திற்கு நேற்று வருகை மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சான், சிங்கப்பூர் பொருளியலில் உற்பத்தித் துறையின் முக்கியத்துவத்தை கொவிட்-19 நோய்ப் பரவல் வலியுறுத்திக் காட்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
"கொரோனா சூழலிலும் அதற்குப் பிந்தைய உலகிலும், நாம் பன்முகத்தன்மைமிக்க பொருளியலைக் கொண்டிருக்க வேண்டியது முக்கியம்," என்றார் திரு சான்.
மூன்று உத்திகள்
2030ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையை மேலும் 50% வளர்க்க வேண்டும் எனும் இலக்கை எட்ட, விரைவான புத்தாக்கம், உற்பத்தி அல்லது ஊழியர் செலவைக் குறைக்காமல் மதிப்புமிக்க பொருள்களை உற்பத்தி செய்வது ஆகிய வழிகளில் உற்பத்தித் துறை போட்டித்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.
அந்த இலக்கை எட்ட, அரசாங்கத்தின் மும்முனை உத்தியைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
முதலாவதாக, அனைத்துலக உற்பத்திச் சந்தையில் முக்கிய தளமாக சிங்கப்பூரை நீடிக்கச் செய்யும் வகையில் சிறந்த அனைத்துலக, உள்ளூர் நிறுவனங்களை அரசாங்கம் ஈர்க்கும்.
மைக்ரான், இன்ஃபீனியான் போன்ற சில உலகின் மிகப் பெரிய பகுதி மின்கடத்தி தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய உற்பத்தித் தளமாக சிங்கப்பூர் விளங்கி வருவதை திரு சான் சுட்டிக்காட்டினார்.
அடுத்ததாக, சிங்கப்பூரர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உயர்நிலை உற்பத்தித் துறையைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனங்களின் அளவையும் செயல்திறனையும் முடுக்கிவிடும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.
இறுதியாக, மாணவர்களை ஈர்க்கும் வகையில் பொறியியல், உற்பத்தி சார்ந்த படிப்புகளை உருவாக்க பலதுறைத் தொழிற்கல்லூரிகளுடனும் பல்கலைக்கழகங்களுடனும் அரசாங்கம் இணைந்து பணியாற்றும்.

